காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆய்வு செய்தார்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவாக்க மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த கோரிக்கைகளை பல்வேறு காலகட்டங்களில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட நகரின் பலதரப்பட்ட பொதுநல அமைப்பினர், அரசியல் அமைப்பினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், அக்கட்சியின் தேசிய தலைவரும், தொடர்வண்டித்துறை நடுவண் இணையமைச்சருமான இ.அஹ்மதிடம் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
கடந்த 28.07.2010 அன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவரும், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவரும், பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், தாருத்திப்யான் நெட்வொர்க் நிறுவனரும், மணிச்சுடர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளருமான எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், மதுரையிலுள்ள - இப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பிலுள்ள டிவிஷனல் கமர்ஷியல் மேனேஜர் திரு.சுந்தர் சீனியர் டிவிஷனல் கமர்ஷியல் மேனேஜர் திரு.ஹோஷியார் சந்த் மற்றும் இத்திட்டத்திற்கான ஒப்புதலைத் தரும் தகுதியிலுள்ள டிவிஷனல் ரீஜனல் மேனேஜர் (டி.ஆர்.எம்.) திரு.ஏ.கே.கோயல் தென்மண்டல சீனியர் டிவிஷனல் இன்ஜினீயர் திரு.பி.என்.எஸ்.செல்லம் ஆகிய தொடர்வண்டித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் விஷயத்தில், தொடர்வண்டித் துறை நிர்வாகம் செய்யவுள்ள பணிகள் குறித்து விபரம் கேட்டனர்.
அவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தொடர்வண்டித்துறை நடுவண் இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவருமான இ.அஹ்மத், முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரைக் கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில், 26.09.2010 அன்று காயல்பட்டினம் வருகை தந்த முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில அமைப்பாளர் வழக்குறைஞர் வெ.ஜீவகிரிதரன், ஆப்பனூர் பீர் முஹம்மத் உள்ளிட்ட குழுவினர், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
நிலையத்திற்குள் செல்லும் வழிப்பாதை (அப்ரோச் ரோடு), கணினி முன்பதிவு மையம், பயணியர் காத்திருப்பறை, நடைமேடை விரிவாக்கம், கழிப்பறை, நிலைய சுற்றுச்சுவர் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைப் பார்த்தனர்.
செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள், இனி செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் பற்றி நிலைய மேலாளர் (பொறுப்பு) ஜான்ஸனிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் கணனிமயமாக்கப்பட்டது முதல் குறைந்த நேரம் செயல்படும் யு.பி.எஸ். (பேட்டரி பேக்அப்) மட்டுமே உள்ளதாகவும், இதனால் மின்தடை நேரங்களில் பயணியர் பயணச்சீட்டு பெற வரும்போது குறித்த நேரத்தில் அவர்களுக்கு பயணச்சீட்டுகளை வழங்குவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
தற்சமயம் கழிப்பறை கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறபோதிலும், அவசரத் தேவைகென தற்காலிக ஏற்பாடு சிறிய அளவிலாவது செய்து தரப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், பயணச்சீட்டு முன்பதிவுக்கென துணை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவர் இதுவரை பணிக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.
நிலையத்தின் நடப்பு மேம்பாட்டுப் பணிகள் திருச்சியைச் சார்ந்த ஜேம்சிங் என்ற ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் சார்பில் இப்பணியைக் கண்காணித்து வரும் கண்காணிப்பாளர் ஜான் வின்ஸென்ட்டிடம் நடப்பு பணிகள் குறித்து கேட்கப்பட்டது.
நிலையத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைய மேலாளர் அறை, பயணியர் காத்திருப்பறை ஆகிய பகுதிகளில் டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,
நிலைய அலுவலகத்திற்கு நேரே தெரியும் நடைமேடையில் சுமார் 40 அடி நீளத்திற்கு மேற்கூரை அமைக்கப்படவுள்ளது என்றும்,
நிலையத்திற்குள் நுழைவதற்கான சாலை (அப்ரோச் ரோடு) தார்சாலையாக்கப்பட்டு வருவதாகவும்,
நடைமேடை இன்னும் இரண்டரை அடி உயர்த்தப்பட்டு உயர்நிலை நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
இப்பணிகள் 6 மாத கால அளவைக் கொண்டது என்றும், இரண்டு மாத பணிகள் முடிவுற்றுள்ளதாகவும், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்நேரத்தில் பயணம் மேற்கொள்வதற்காக நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஆறுமுகநேரியைச் சார்ந்த பயணி ஒருவர் கூறுகையில், பயணியர் காத்திருப்பறையின் கான்க்ரீட் மேல்தளம் சிறிதளவு கூட மாற்றம் செய்யப்படவில்லை என்றும், மழை நேரங்களில், அங்கு நிற்கக்கூட இயலாத அளவுக்கு தண்ணீர் ஒழுக்கு இருக்கும் என்றும், அதையும் சரிசெய்திட ஆவன செய்யுமாறும் ஆய்வுக்குழுவிடம் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகரத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஜரூக் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர். |