காயல்பட்டினம் நகரின் ஏழைகளுக்கு உதவிடும் வகைக்கு கூடுதல் நிதி திரட்டுவதற்காக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உண்டியல் மூலம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 01.10.2010 அன்று இரவு 07.00 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகத்தில், மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கூட்டத்திற்குத் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் அஹ்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். எஸ்.எச்.உதுமான் அனைவைரையும் வரவேற்றுப் பேசினார்.
சிங்கை அமைச்சர் மறைவுக்கு இரங்கல்:
அண்மையில் காலமான சிங்கப்பூர் அரசின் வெளியுறவுத்துறை மூத்த அமைச்சர் பாலாஜி சதாசிவம் மறைவிற்கு மன்றத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் மறைவிற்கு இரங்கல்:
கடந்த 23.09.2010 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் நடந்த விபத்தில் பலியான காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் கலீலுர்ரஹ்மான், படுகாயமுற்று மறுநாள் மருத்துவமனையில் காலமான அவரது மனைவி முஹ்யித்தீன் ஃபாத்திமா ஆகியோரின் மறைவிற்கு மன்றத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அவ்விருவரின் பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் பொருத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனபதியை வழங்கியருள இக்கூட்டம் பிரார்த்திப்பதோடு, இழப்பால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு - குறிப்பாக அன்புக் குழந்தைகள் இருவருக்கும், அவர் பணியாற்றிய காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நல்ல பொறுமையைத் தந்தருள வேண்டுமென இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை:
அத்துடன், நகரில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் காயலர்கள் - குறிப்பாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் மிகுந்த கவனத்துடன், தலைக்கவசம் (helmet) அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதோடு, அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டாதிருக்குமாறு எம் மன்றம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது.
உண்டியல் திறப்பு:
காயல்பட்டினம் நகரின் ஏழைகளுக்கு உதவிடும் வகைக்கு கூடுதல் நிதி திரட்டுவதற்காக உறுப்பினர்களுக்கு வழங்கும் திட்டம் அண்மையில் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உறுப்பினர்களிடமிருந்து உண்டியல்கள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் தொகை மன்றத்தின் வரவு கணக்கில் சேர்க்கப்படும்.
இக்கூட்டத்தில், அந்த உண்டியல்கள் ஆடிட்டர் ஹாஜா முஹ்யித்தீன் மேற்பார்வையில் திறக்கப்பட்டு, அவற்றுள்ளிருந்த காசுகள் மற்றும் பணத்தாள்கள் கணக்கிடப்பட்டு, மன்றப் பொருளாளர் எஸ்.எச்.அன்ஸாரீயிடம் அவை கையளிக்கப்பட்டது.
பின்னர், மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தனது கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தார்:-
உண்டியல் மூலம் மன்ற உறுப்பினர்கள் வழங்கி வரும் நன்கொடைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், உண்டியல் மூலம் உறுப்பினர்கள் இன்னும் ஆர்வத்துடன் கூடுதல் நிதிகளை நகர்நலப் பணிகளுக்காக அளித்து, “ஸதக்கத்துன் ஜாரியா” எனும் நீடித்த நற்கூலியைப் பெறவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
செய்தி வெளியிடுவது விளம்பரத்திற்கல்ல!
பின்னர் பேசிய அவர், காயல்பட்டினம்.காம் வலைதளத்தில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் நிழற்படங்கள் அனைத்தும், இம்மன்றம் செய்யும் சேவைகள் மிகச் சிறிதாயினும், ஏதேனும் ஒரு வகையில் உலகின் பிற பகுதிகளிலிருக்கும் மன்றங்களை இதைப்போன்றோ அல்லது இதைவிட சிறப்பாகவோ செய்திடத் தூண்டும்; அதுபோல, பிற மன்றங்களின் நடவடிக்கைகளை காயல்பட்டினம்.காம் வலைளத்தில் நாம் காணுகையில், அவர்களிடமிருக்கும் சிறந்தவற்றை நாம் முன்னுதாரணமாகக் கொள்ளலாம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே வெளியிடப்படுவதாகவும், சிறிதோ பெரிதோ இந்த வலைளத்தில் நாம் செய்பவற்றை நிச்சயம் பதிவாக்கிட வேண்டுமென்றும், இதில் வேறெந்த சுய விளம்பரமும் ஒருபோதும் யாருடைய மனதிலும் இல்லை என்றும் தெரிவித்தார்.
நம் தாயகமான காயல்பட்டினத்தை விட்டும் வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பல்கிப் பரவி வாழும் நமது காயலர்கள் நமதூரின் உறுதிபடுத்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், நமது கருத்துக்களை நன்முறையில் பரிமாற்றம் செய்துகொள்ளவும் இந்த வலைதளம் ஒரு சிறந்த தளமாகத் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சேவையாளர்களுடன் இருப்போம்!
தன்னலமின்றி சேவையாற்றும் நல்லுள்ளங்களோடு நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்; அல்லது அவர்களின் சேவைகளுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும்; அல்லது மவுனமாக அவதானிப்பவர்களாகவாவது இருக்க வேண்டுமேயல்லாது, அவர்களின் தன்னலமற்ற சேவைகளை பொருளற்று விமர்சிக்கக் கூடாது என மன்ற உறுப்பினர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் கலந்துகொள்வதன் அவசியம்:
மன்றத்தால் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள் எதுவாயினும், அது சம்பந்தப்பட்ட மன்ற உறுப்பினர்கள் - தவிர்க்கவியலாத பணிகள் குறுக்கிட்டாலேயன்றி அக்கூட்டங்களில் அவசியம் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அவர், சிறியவர்களோ, பெரியவர்களோ - பலரின் பலதரப்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டால் மட்டுமே மன்ற நடவடிக்கைகள் இன்னும் சிறப்புடன் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
நிர்வாகக்குழு விரிவாக்கம்:
மன்றத்தின் நிர்வாகக் குழுவை ஒரு துணைத்தலைவர், இரண்டு துணைச் செயலர்களை கூடுதலாக நியமித்து விரிவாக்கம் செய்ய வேண்டுமென தலைவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், மன்றத்திற்கு தியாக மனப்பான்மையுடன் செயல்படக்கூடிய தகுதிமிக்க புதிய தலைவரை இனங்காண்பதற்கு தனக்கு உதவுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்ட அவர், அவருக்கு உறுதுணையாக மன்றத்தின் சேவை நடவடிக்கைகளுக்கு என்றும் போல் தனது மனமார்ந்த ஒத்துழைப்புகள் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செயற்குழுவிற்கு பாராட்டு:
மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள், நகர்நலப் பணிகள் செயல்படுத்தப்பட்டதற்குக் காரணமான மன்ற செயற்குழுவை - குறிப்பாக மன்றச் செயலர் ரஷீத் ஜமான், துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் ஆகியோரை தான் நெஞ்சாரப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
அத்தியாவசிய சமையல் பொருட்களால் ஏழைகளுக்கு மிகுந்த பயன்:
அண்மையில் தாம் தாயகம் சென்று வந்தபோது, மன்றத்தால் அங்கு நிறைவேற்றப்பட்ட சேவைப்பணிகளை - குறிப்பாக, நலிவுற்றோருக்கு மன்றத்தால் வழங்கப்பட்ட அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவி அவர்களுக்கு பெரும் பயனளித்துள்ளதாகவும், ரமழானில் அது ஏழைகளுக்கு பேருதவியாக அமைந்ததாகவும் தெரிவித்த மவ்லவீ நஹ்வீ முஹம்மத் இப்றாஹீம், இதற்காக தன்னலமின்றி சேவையாற்றிய மன்ற உறுப்பினர்கள், அவர்களுடன் இணைந்து செயலாற்றிய காயல்பட்டினம் நகரின் பொதுநல ஆர்வலர்களை தாம் மனதாரப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
மன்றத்தில் புதிதாக உறுப்பினர்களாகியிருக்கும் எஸ்.எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர், முஹம்மத் அபூபக்கர் சித்தீக் ஆகியோர் இச்செயற்குழுவில் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர்.
மணவாழ்த்து:
வரும் 10.10.’10 அன்று மணவாழ்வு காணவுள்ள மன்ற உறுப்பினர் அம்ஜதுக்கு மன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் 09.10.2010 அன்று நடைபெறும் என்றும், கூட்டம் நடைபெறும் இடம் - நேரம் உள்ளிட்ட முழு விபரங்கள் மன்ற உறுப்பினர்களுக்கு தனி மின்னஞ்சல் மூலம் மன்றச் செயலரால் அறியத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் சமையல் பொருட்களுதவி:
எதிர்வரும் ஹஜ் பெருநாளுக்கு முன்பாக, நலிவுற்ற காயலர் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியாக மீண்டும் வழங்கப்படும் எனவும், அத்துடன் தேவையுடையோருக்கு உள்ஹிய்யா இறைச்சியும் வினியோகிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
விண்ணப்பங்கள் பரிசீலனை:
மன்றத்தின் வரவு - செலவு கணக்குகள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது. உதவி கோரி காயலர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து, அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ள மன்ற பொதுக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்ற துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பட்ஜெட் வெளியிட கோரிக்கை:
தேவையுடையோருக்கு உடனுக்குடன் உதவிகள் செய்திடும் பொருட்டு முற்கூட்டியே நிதியொதுக்கீடு செய்யுமாறு மன்றத்தலைவர் உள்ளிட்ட செயற்குழுவை துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் கேட்டுக் கொண்டார். அவரது இவ்வேண்டுகோளை வரவேற்ற மன்றத்தலைவர், வரும் பொதுக்குழுவில் மன்றத்தின் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஆயத்தப்பணிகளைச் செய்திடுமாறு செயற்குழுவைக் கேட்டுக்கொண்டார்.
செயற்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்:
செயற்குழுவிலிருந்து விடைபெறும் மன்ற உறுப்பினர்கள் நஹ்வீ ஷெய்க் அலீ ராஜிக், முஹம்மத் அலீ, அம்ஜத், ஜவஹர், எஸ்.எச்.உதுமான் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
01.10.2010 - 31.03.2011 பருவத்திற்கான மன்றத்தன் செயற்குழு உறுப்பினர்களாக, உதுமான், முஹம்மத் ஹரீஸ், ஜவஹர் இஸ்மாஈல், அஸ்ஹர், பி.எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
வேலை தேடுவதற்காக மீண்டும் காயலர் வரவழைப்பு:
வேலை தேடும் பொருட்டு, கல்வித்தகுதி, அனுபவம், குடும்ப பொருதாரச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தகுதியுள்ள ஒரு காயலரை சிங்கப்பூர் வரவழைக்க கூட்டம் முடிவு செய்தது. விருப்பமுள்ள காயலர்கள், kwasingapore@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது முழு விபரங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மாதச்சந்தா தொகை உயர்த்தல்:
மன்ற உறுப்பினர்களின் மாதச்சந்தா தொகையை அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும் என்ற மன்ற துணைச் செயலரின் கருத்து பின்னர் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஐக்கியப் பேரவை கோரிக்கை:
மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி வாவு ஷாஜஹான் மூலமாக பெறப்பட்ட காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் வேண்டுகோள் கடிதம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. ஐக்கியப் பேரவையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, அதன் தேவைகளை அறிந்து தெரிவிக்குமாறு மன்றச் செயலர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
வேறெதுவும் விவாதிக்கப்பட வேண்டியதில்லை என்ற நிலையில், ஹாஃபிழ் அஹ்மத் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்ட நிறைவில், அனைவருக்கும் இரவு உணவு விருந்தளிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.H.அன்ஸாரீ,
பொருளாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர்.
இச்செய்தியில் வெளியிடப்பட்டிருந்த சிங்கை காயல் நல மன்றத்தின் தொடர்பு மின்னஞ்சல் முகவரி kwas@hotmail.com என்றிருந்தது, kwasingapore@hotmail.com என்று திருத்தப்பட்டுள்ளது. |