அடுத்த மாதம் இன்பச் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் விரைவாகச் செய்து முடிக்கப்பட வேண்டும் என தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 24.09.2010 வெள்ளிக்கிழமை மாலை 07.30 மணிக்கு, பாங்காக் கே.டி.ஜெம் ஹவுஸ் வளாகத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில், ஹாஃபிழ் தமீமுல் அன்ஸாரீயின் கிராஅத்துடன் துவங்கியது.
அவ்வமயம், தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்திற்கு எமது மன்றத்தின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டனர். ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், மவ்லவீ அபுல்ஹஸன் ஷாதுலீ, ஹாஜி கே.எம்.எஸ்.இப்றாஹீம், ஹாஜி வாவு முஹம்மத் அலீ ஆகியோர் ஏற்கனவே எம் மன்றத்தின் சார்பில் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் பிந்திய இருவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ் (சன் மூன் ஸ்டார்), எம்.ஏ.முஹம்மத் ஸஈத் (தாய்நாடு ட்ராவல்ஸ்) ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - பைத்துல்மால்களுக்கு அதிக நிதியளித்தல்:
ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் தொடராக உதவி வரும் நமதூர் பைத்துல்மால்களுக்கு தக்வா சார்பில் அளிக்கப்படும் நிதியுதவி மிகக் குறைவாக இருப்பதால், ஜக்காத் ஃபண்ட் என்ற அமைப்பை மன்றத்தின் சார்பில் ஏற்படுத்தி, அதிகமாக ஜகாத் நிதியைத் திரட்டி அவற்றுக்கு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - இக்ராஃவிற்கு உறுப்பினர் சேர்க்கை:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு அதிகளவில் உறுப்பினர்களைச் சேர்ப்பதென தீர்மானிக்கப்பட்டு, துவக்கமாக 30 உறுப்பினர்கள் சேர்ந்து, தமது ஆண்டுச் சந்தா தொகை ரூ.300ஐ செலுத்தினர்.
தீர்மானம் 3 - இன்பச் சுற்றுலா ஏற்பாடுகள்:
அக்டோபர் 02ஆம் தேதியன்று மன்ற உறுப்பினர்கள் இன்பச் சிற்றுலா செல்வதென தீர்மானிக்கப்படுவதோடு, இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு என்.எஸ்.ஹனீஃபா, எஸ்.ஏ.கே.இஸ்ஸத்தீன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
தீர்மானம் 4 - ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் மறைவிற்கு இரங்கல்:
கடந்த 23.09.2010 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் நடந்த விபத்தில் பலியான காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் கலீலுர்ரஹ்மான், படுகாயமுற்று மறுநாள் மருத்துவமனையில் காலமான அவரது மனைவி முஹ்யித்தீன் ஃபாத்திமா ஆகியோரின் மறைவிற்கு மன்றத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படுவதோடு, வல்ல அல்லாஹ் அவர்களிருவரின் பாவப் பிழைகளையும் பொருத்து, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் தம்பதியாக வாழச் செய்வானாக என்று எம் மன்றம் பிரார்த்திக்கிறது.
அத்துடன், அவர்களின் இழப்பால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு - குறிப்பாக அன்புக் குழந்தைகள் இருவருக்கும் வல்ல அல்லாஹ் நல்ல பொறுமையையும், வளமான எதிர்காலத்தையும் தந்தருள்வானாக என்றும் பிரார்த்திக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மவ்லவீ ஷாதுலீ ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.செய்யித் முஹம்மத்,
செயலாளர்,
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா),
பாங்காக், தாய்லாந்து. |