அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை நாளை (செப்டம்பர் 30) மாலை 3:30 மணிக்கு வழங்குகிறது. ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கின் தீர்ப்பு - 1528ஆம்ஆண்டு முகாலய மன்னர் பாபர் ஆட்சியின் போது - அயோத்தியில் - ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் மசூதி கட்டப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1980ஆம்ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சி அடங்கிய சங்க பரிவார் இயக்கங்கள் இப்பிரச்சனையை கையில் எடுத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பலரின் உயிரை பலிக்கொண்ட இப்பிரச்சனையின் உச்சக்கட்டமாக டிசம்பர் 6, 1992 அன்று புராதான பாபர் மசூதி சங்க பரிவார் அங்கத்தினர்களால் இடிக்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் - தற்காலிக கட்டிட அமைப்பில் - ராமர் சிலை வைக்கப்பட்டு ஹிந்துக்களால் வணங்கப்பட்டு வருகிறது.
நாளை உத்திர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பென்ச் - தனது தீர்ப்பை நாடு முழுவதும் பதட்டத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் மத்தியில் வெளியிட உள்ளது.
இம்முக்கிய தீர்ப்பினை வழங்கவுள்ள மூன்று நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சிப்கத்துல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் ஆவர்.
தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் அது மேல்முறையீடுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
|