தேர்வு நிலை பஞ்சாயத்தாக (SELECTION GRADE TOWN PANCHAYAT) இருந்த காயல்பட்டினம் ஜுன் 16, 2004 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 9, 2010 தேதியிட்ட அரசு ஆணைப்படி மூன்றாம் நிலை நகராட்சியாக (THIRD GRADE MUNICIPALITY) இருந்த காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியாக (SECOND GRADE MUNICIPALITY) உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்த 49 மூன்றாம் நிலை நகராட்சிகளில் - காயல்பட்டினம் மற்றும் கீழக்கரை உட்பட 21 நகராட்சிகள் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 7 நகராட்சிகள் முதல் நிலை நகராட்சியாகவும் (FIRST GRADE MUNICIPALITY), 6 நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சியாகவும் (SELECTION GRADE MUNICIPALITY), 2 நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சியாகவும் (SPECIAL GRADE MUNICIPALITY) உயர்த்தப்படடுள்ளன.
இதற்கான பணிகள் மார்ச் மாதமே துவங்கியதாக தெரிகிறது. மார்ச் 22, 2010 அன்று நடந்த காயல்பட்டின நகராட்சியின் அவசரக்கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படடுள்ளது. அந்த அவசரக்கூட்டம் நகராட்சி நிர்வாகதுறையின் இயக்குநர் உடைய 11.3.2010 தேதியிட்ட கடிதத்தை மேற்கோள்காட்டி 19.3.2010 அன்று அழைக்கப்பட்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகதுறையின் இயக்குநர் உடைய 11.5.2010 மற்றும் 25.5.2010 தேதியிட்ட பரிந்துரை கடிதங்களை மேற்கோள்காட்டி தமிழகத்திலிருந்த 49 மூன்றாம் நிலை நகராட்சிகளில், 36 மூன்றாம் நிலை நகராட்சிகளை தமிழக அரசு தர உயர்வு செய்துள்ளது.
2008ம் ஆண்டு அரசு ஆணைப்படி (G.O. Ms. No. 237; 2-12-2008) - ஆண்டு வருமானம் 10 கோடியை தாண்டிய நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சியாகவும், 6 கோடி முதல் 10 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ள நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சியாகவும், 4 கோடி முதல் 6 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ள நகராட்சிகள் முதல் நிலை நகராட்சியாகவும், ஆண்டு வருமானம் 4 கோடியை தாண்டாத நகராட்சிகள் இரண்டாம் நிலை நகராட்சியாகவும் பிரிக்கப்படுகின்றன.
காயல்பட்டண நகராட்சியின் 2006-2009 வரையிலினான மூன்று ஆண்டு வருமானம் 3.17 கோடி ரூபாயாகும்.
இவ்வரசு ஆணைக்கு பிறகு தமிழகத்தில் மொத்தம் 22 சிறப்பு நிலை நகராட்சிகள், 35 தேர்வு நிலை நகராட்சிகள், 36 முதல் நிலை நகராட்சிகள், 43 இரண்டாம் நிலை நகராட்சிகள், 13 மூன்றாம் நிலை நகராட்சிகள் உள்ளன.
|