தமிழ்நாடு ஹஜ் குழு சார்பில், இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஹாஜியருக்கு மாவட்ட வாரியாக தடுப்பூசி மற்றும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஹஜ் பயணியருக்காக, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் இத்தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இன்று காலை 10.00 மணிக்குத் துவங்கிய இம்முகாமை, கே.எம்.டி. மருத்துவமனையின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துவக்கி வைத்தார்.
தமிழக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் உமா, அவரது உதவியாளர் காதர் ஷா, டாக்டர் லூர்து பின், டாக்டர் கன்னியம்மாள், சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ஆர்.சுப்பிரமணியம், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், ராமசுப்பிரமணியம், கிராம சுகாதாரத்துறை செவிலியர் கோமதி, கஸ்தூரி ஆகியோர் இம்முகாமில் ஹஜ் பயணியருக்கு மருத்துவ ஆலோசனை, தடுப்பூசி, போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஆகியவற்றை வழங்கினர்.
முகாமில் கலந்துகொண்ட பயணியரின் பெயர் பதிவுப் பணிகளை, தமிழ்நாடு ஹஜ் குழுவின் இளநிலை உதவியாளர்களான ஃபக்ருத்தீன் அலீ அஹ்மத், முஹம்மத் யதுல்லாஹ் அஸ்ஹர், தன்னார்வலர் நெய்னா முஹம்மத் ஆகியோர் மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவியாக அமீரக காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவாநவாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணியைச் சார்ந்த சித்தீக், ஹாஃபிழ் முஹம்மத் ஸாலிஹ், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஆகியோர் பதிவுப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
இம்முகாமில், தமிழ்நாடு ஹஜ் குழு மற்றும் தனியார் ஹஜ் நிறுவனங்கள் சார்பாக இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ஆண் - பெண் ஹாஜிகள் 108 பேர் கலந்து பயனடைந்தனர். அவர்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத 62 பேருக்கு தடுப்பூசியும், கலந்துகொண்ட அனைவருக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்தும் வழங்கப்பட்டது.
முகாம் நடைபெறுவதற்கான இடவசதியை கே.எம்.டி. மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஹாஜி எம்.எம்.நூஹ், ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், மேலாளர் அப்துல் லத்தீஃப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முகாம் ஒருங்கிணைப்புப் பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் செய்திருந்தனர். |