ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் 27ஆம் ஆண்டு துவக்கவிழாவில், 21 புதிய மாணவர்களுக்கு புதுப்பாடம் துவக்கிக் கொடுக்கப்பட்டது.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையை தாய்ச்சபையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா என்ற பெயரில் திருக்குர்ஆன் மனனப் பிரிவு துவக்கப்பட்டது.
துவக்கிய ஆண்டு முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ்களாக இங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த மத்ரஸாவின் 27ஆம் ஆண்டு துவக்கவிழா இன்று காலை 09.30 மணிக்கு மத்ரஸா வளாகத்தில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக, மத்ரஸாவின் மறைந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார்.
மத்ரஸா பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், இவ்வாண்டு புதிதாக திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) செய்வதற்காக மத்ரஸாவில் சேர்க்கை பெற்றுள்ள 21 மாணவர்களுக்கு புதிய பாடத்தை, மத்ரஸா பேராசிரியரும், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துவக்கிக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, மத்ரஸா செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தை, மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ வழங்கினார்.
பின்னர், இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஹாஜிகளுக்கு மத்ரஸா நிர்வாகம் சார்பில் ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
இறுதியாக, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நன்றி கூற, மத்ரஸா ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், மத்ரஸாவின் நிர்வாகிகள், முன்னாள் - இன்னாள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, மத்ரஸாவின் முதன்மைப் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ தலைமையில், மத்ரஸா ஹிஃப்ழுப் பிரிவு கண்காணிப்பாளர் எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், முஸ்தஃபா, நஹ்வி முத்துவாப்பா, சிராஜ் நஸ்ருல்லாஹ், எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன், ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட பலர் செய்திருந்தனர்.
தற்சமயம் இந்த ஹிஃப்ழுப் பிரிவில் 29 மாணவர்கள் பயின்று வருகின்றனர். புதிதாக சேர்ந்துள்ள 21 மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 50 மாணவர்கள் உள்ளனர்.
மத்ரஸா முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்களுடன் புதிய மாணவர்கள்
மத்ரஸா முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்களுடன் நடப்பு மாணவர்கள்
தாய்ச்சபை - சேய்ச்சபை நிர்வாகிகளுடன் மத்ரஸாவின் முன்னாள் மாணவர்கள்
தகவல்:
ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸா,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |