காயல்பட்டினம் நகரை சுகாதாரமான நகராக்க ஆவன செய்ய வேண்டுமென 17.09.2010 அன்று நடைபெற்ற ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பாலா ஹோட்டல் கூட்ட அரங்கில், 17.09.2010 அன்று நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மக்கா எஸ்.ஐ.சிராஜுத்தீன், டாக்டர் முஹம்மத் ஜியாத், குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் குளம் எஸ்.எம்.முஹம்மத் இர்ஷாத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். எஸ்.ஐ.அப்துல் பாஸித் வரவேற்றுப் பேசினார்.
துவக்கமாக உரையாற்றிய கூட்டத் தலைவர் எஸ்.எச்.ஹுமாயூன் கபீர், நகர்நலத்திற்காக இதுவரை ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆற்றியுள்ள பணிகள், அதற்காக மன்ற உறுப்பினர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து பேசிய கூட்டத் தலைவர், சமூகத்தை முன்னேற்றும் மன்றத்தின் இவ்வறப்பணிகளில், உறுப்பினர்கள் அனைவரும் தமது முழு பங்களிப்பை மனமுவந்து தொடர்ச்சியாக வழங்க வேண்டுமென தனக்கே உரிய பாணியில் கூட்டத்தில் கலந்துகொண்டோரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றினார்.
பின்னர் மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து மன்றச் செயலர் சட்னி செய்யித் மீரான் விளக்கிப் பேசினார். கடந்த மூன்று கூட்டங்களில் மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் மற்றும் அவை செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
அடுத்து உரையாற்றிய மன்றச் செயலர் மக்கா எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், இதுபோன்ற மன்றங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து இறைமறை குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும் மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
மன்றத்தின் கடந்த ஏழு ஆண்டு கால நகர்நலப் பணிகள் குறித்து விவரித்துப் பேசிய அவர், நம் முன்னோர்கள் நம் நகருக்காக செய்த நற்சேவைகளை நினைவுகூர்ந்ததோடு, அந்த நல்வழிமுறை தொடர்ந்து நம்மால் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். அவரது உரை, கூட்டத்தில் இருந்தோரை நற்செயல்களின்பால் தூண்டிச் செல்வதாக அமைந்தது.
அடுத்து, மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை மக்கா ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ் சமர்ப்பித்தார். மருத்துவம், கல்வி, சிறுதொழில் வகைக்காக தேவையுடையோருக்கு நகரில் உதவித்தொகைகள் வினியோகிக்கப்பட்ட விதம் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் பின்வருமாறு நடைபெற்றது:-
எஸ்.ஷேக் அப்துல்லாஹ்:
சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஒரு சிறு கதை மூலம் விளக்கிப் பேசிய அவர், படித்து முடித்த பட்டதாரிகள் தம் படிப்புக்கேற்ற வேலையைத் தேடுகையில், சஊதியில் - குறிப்பாக ஜித்தாவில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர மன்றம் ஆவன செய்ய வேண்டும் என்றார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றம், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் பொருட்டு, அவர்களுக்கு சகல வசதிகளுடன் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துதவுவதை அவர் மேற்கோள் காட்டி, இதுபோன்றதொரு நடைமுறையை ஜித்தா காயல் நற்பணி மன்றமும் செயல்படுத்தலாம் என்று பேசினார்.
கே.வி.கே.ஷாஹ் மீரான்:
சச்சார் கமிஷன் பரிந்துரையில் காணப்படும் முஸ்லிம் சமூகத்தை கல்வித்துறையில் முன்னேற்றுவதற்கான ஆலோனைகள், இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.
எஸ்.எச்.அப்துல் காதிர்:
காயல்பட்டினம் நகரில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது குறித்து கவலைப்பட்டுப் பேசிய அவர், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பேணிப்பாதுகாத்திடும் பொருட்டு, சுற்றச்சூழல் விஷயத்தில் அவர்களை கூடுதல் விழிப்புணர்வு கொள்ளச் செய்திட, இன்னும் நிறைய குறும்படங்களை (documentary) தயாரித்து வெளியிட வேண்டும் என்றார். இக்குறிக்கோள் குறித்து அனைவரின் சிந்தனையையும் தூண்டும் வகையில், குறுந்தகவல்களை அவர் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.
டாக்டர் ஜியாத்:
ஈத் முபாரக் என்று இனிய பெருநாள் வாழ்த்துக்களுடன் தனதுரையைத் துவக்கிய அவர், இந்த ரமழானில் நாம் செய்த நல் அமல்கள், ரமழானில் நாம் பெற்ற படிப்பினைகள் நம் வருங்கால வாழ்விலும் தொடர வேண்டும் என்றார். வரும் ஆண்டுகளில் நாம் ரமழானை அடைவோமாயின், ரமழானுக்கு முன்னரே அந்த மாதத்தை எங்ஙனம் நல்வழியில் பயன்படுத்துவது என்பது குறித்து திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு குறித்து அவர் விவரித்துப் பேசியதை கூட்டத்திலிருந்தோர் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்தனர். அந்நிகழ்ச்சியின்போது, அவ்விடத்தில் முழுமையாக துணை நின்ற மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களை அவர் பாராட்டிப் பேசினார்.
குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன்:
இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் நம் குழந்தைகளை நாம் வளர்த்திட வேண்டியது அவசியம்... அவ்வாறில்லையேல், அது நம் குடும்பத்தின் நற்சூழலைப் பாதிக்கும் காரணியாகி விடுவதோடு, சமுதாயத்தில் வேற்றுமை உருவாவதற்கும் காரணியாகிவிடும் என்றார்.
சமீப காலமாக காயல்பட்டினத்தில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து மிகுந்த கவலையுடன் அவர் ஆற்றிய உரை, மிகவும் பயனுள்ளதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து அனைவரையும் பாதுகாக்கத் தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.
பக்வா தலைவர் மஹ்மூத் நெய்னா:
உம்றா செய்து முடித்துவிட்டு வந்திருந்த பஹ்ரைன் காயல் நல மன்ற (பக்வா) தலைவர் மஹ்மூத் நெய்னா, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிற்றுரையாற்றினார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகள் குறித்து பாராட்டிப் பேசிய அவர், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுப் பிரச்சார செயல்திட்டத்தில், தமது பஹ்ரைன் காயல் நல மன்றமும் இணைந்து செயல்பட தாம் பெரிதும் விரும்புவதாக தெரிவித்தார்.
எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக்:
இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்த அவர், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்த சில அம்சங்களை தனதுரையில் பகிர்ந்துகொண்டார். வேகமும், வெடிப்பும், வேடிக்கையும் கலந்த அவரது உரை அனைவரையும் ஆர்வத்துடன் கவனிக்கச் செய்தது.
எம்.எம்.அஹ்மத் லெப்பை:
உம்றா செய்வதற்காக வந்திருந்த அவர், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் பாராட்டிப் பேசியதோடு, அனைவருடனும் தனது பெருநாள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
விளக்கு எஸ்.ஏ.கே.காதர் ஷாம் (காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்):
இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்வது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், நமது வாழ்வை அதன் அடிமட்டத்திலிருந்தே சீர் செய்திடும் பொருட்டு, நிறைய நல்லொழுக்கப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
இக்கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் அதிரை ஜைனுல் ஆபிதீன் உரையாற்றினார்.
அல்லாஹ் திருமறையில் சுட்டிக்காட்டும் சிறந்த சமுதாயம் யார்? என்பது குறித்து தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், அதுகுறித்த ஏராளமான உதாரணங்களை திருமறை குர்ஆனிலிருந்தும், திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும் எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் நகர்நலப்பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியவை என்று பேசிய அவர், இந்தப் பெருநாள் ஒன்றுகூடலில் அனைவரோடும் தானும் கலந்திருப்பது மிகுந்த மனமகிழ்வைத் தருவதாகத் தெரிவித்தார். இம்மன்றம் இன்னும் பல நல்ல செயல்திட்டங்களை ஆர்வத்துடன் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இக்கூட்டத்தில் தன்னை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்தமைக்காக மனமுவந்த நன்றியைத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
மன்றத்தின் உறுப்பினரும், காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவருமான ஹாஃபிழ் முஜாஹித் அலீ இயற்றி, அதே தெருவைச் சார்ந்த சிறுமி ஸஃபீரா தன் இனிய மழலைக் குரலால் பாடிய மன்றத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பாடல் பதிவு இக்கூட்டத்தின்போது அனைவரும் கேட்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகளை எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப், எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம், எஸ்.ஏ.உமர் அலீ ஆகியோர் செய்திருந்தனர். கூட்ட ஏற்பாடுகளுக்கு பொறியாளர் பஷீர் அனுசரணை செய்திருந்தார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். கூட்டத்தில், மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் தம்மை அனைவருக்கும் அறிமுகம் செய்துகொண்டனர்.
பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை விரிவுபடுத்தல்:
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மன்றத்தால் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரக் கருத்தரங்கம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு. நகரின் இதர அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் இப்பிரச்சார செயல்திட்டத்தை விரிவுபடுத்தி, நகரை முழு சுகாதார (LITTER FREE) நகரமாக்கிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 15.10.2010 அன்று சகோ.ஷமீம் இல்லத்தில் நடைபெறும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் ஜி.எம்.சுலைமான் நன்றி கூற, ஹாஃபிழ் குளம் எஸ்.எம்.முஹம்மத் இர்ஷாத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
Y.M.முஹம்மத் ஸாலிஹ் மூலமாக,
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
ஜித்தா, சஊதி அரபிய்யா. |