நேற்று (23.09.2010) மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் நடந்த விபத்தில் பலியான - காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீலுர்ரஹ்மானின் உடல், இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் மதியம் 01.30 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அவரது ஜனாஸா (உடல்) ஸீ-கஸ்டம்ஸ் சாலை, சித்தன் தெரு வழியாக அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் வைக்கப்பட்டது.
அங்கு ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும், கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார். பின்னர் அவரது பாவ மன்னிப்புக்காகவும், மறுமை வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஜனாஸா, பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், சென்ட்ரல் பள்ளிகளின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், நகரின் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், நகர பிரமுகர்கள், பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியரின் சொந்த ஊரான சங்கரன்கோவில் ஜமாஅத்தினர், அவரது மனைவியின் சொந்த ஊரான பேட்டை ஜமாஅத்தினர் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். |