தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழுக் கூட்டம், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில், 21.09.2010 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில், கடந்த 21.09.2010 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
1. நமது சபையின் செயலாளரான கண்ணியமிக்க மெளலானா மெளலவி ஹாபிஸ் F.M.இப்ராஹிம் ரப்பானி காதிரி சாஹிப் அவர்களின் இழப்பிற்கும் காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் அவர்களின் காதிம் ஏ.கே. முஹம்மது மீரா சாஹிப் அவர்களின் இழப்பிற்கும் இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் அவர்களுக்கு ஈஸாலே ஸவாபு செய்யப்பட்டது.
2. நமது மஜ்லிஸின் புதிய செயலாளராக மெளலானா மெளலவி ஸெய்யிது வஜீஹுன்னகீ சகாப் லதீபி ஷத்தாரி ஆலிம் அவர்களும் பொருளாளராக மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அப்துர் ரஜாக் கௌஸி ஆலிம் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் மத்ஹபுகளின் அடிப்படையில் வக்ஃபு செய்யப்பட்டுள்ளன. அவ்விதம் செய்யப்பட்ட வஃக்பை அவ்விதமே நிலைநாட்டும்படி பள்ளி நிர்வாகங்களையும், தமிழக அரசையும் இந்த மஜ்லிஸ் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
4. வக்ஃபு வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் போது நமது தமிழக அரசு தர்கா நம்பிக்கையுள்ள சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடையவர்களை நியமிக்கும்படி இச்சபை கேட்டுக்கொள்கிறது.
5. மாவட்ட வாரியாகவும், ஊர்வாரியாகவும் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து மஜ்லிஸ் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும். இந்த பணிக்காக சுன்னத் வல்ஜமாஅத் இளைஞர்கள் ஊக்கமாக உழைக்க வேண்டும் என இச்சபை கேட்டுக்கொள்கிறது.
6. இக்கூட்டம் நடைபெற இடம் அளித்து கூட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த காதரியா கொடிமர சிறு நெய்னார் பள்ளி நிர்வாகத்தினரையும், குறிப்பாக ஆலி ஜனாப் V.S.L. ஷைகு அப்துல் காதர் அவர்களுக்கும், குளம் ஜமால் முஹம்மது அவர்களுக்கும் அவர்களின் அமைப்பைச் சேர்ந்த அனைத்து நபர்களுக்கும் இச்சபை தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் பாத்திஹா துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்ட ஏற்பாடுகளை காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
குளம் ஜமால் முஹம்மத்,
காயல்பட்டினம். |