மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு அறிவித்துள்ள பொதுநுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை மறைத்து தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு ஏற்கனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், பொது நுழைவுத் தேர்வு முறையை அறவே நீக்க வேண்டுமென்றும் முதல்வர் 15.08.2010 அன்று பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி, 2007-2008 முதல் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று தெரிவித்து, இந்த முறை தொடரப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், தமிழக அரசு தன்னையும் ஒரு வாதியாக 19-8-2010 அன்று இணைத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு 17.09.2010 அன்று விசாரணைக்கு வந்தபோதும் தமிழக அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி, பொது நுழைவுத் தேர்வுகள் முறைக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி 18.09.2010 நாளிட்ட நாளேடுகளில் வெளிவந்துள்ளது.
இவ்வழக்கு 17-9-2010 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் இதனை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுபோன்று மற்ற மாநிலங்களும் இதனை எதிர்க்கலாம் என்றும், எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவு எடுக்கும் முன்னர் அனைத்து மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பின்னர், அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும், மற்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்தினாலும், தமிழ்நாடு மருத்துவ மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மத்திய அரசின் இந்த முடிவையும் தமிழக அரசு எதிர்க்கிறது. அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதால் இந்த அரசு தொடர்ந்து மத்திய அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றுள்ளது.
மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள 27-8-2010 நாளிட்ட கடிதத்தில், இந்திய மருத்துவக் குழுமம் பரிந்துரைத்துள்ள மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு எல்லா மாநிலங்களுடனும், மருத்துவக் கல்வியாளர்களுடனும் கலந்து விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது. மத்திய அரசோ அல்லது இந்திய மருத்துவக் குழுமமோ தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. |