காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில், இன்று மாலை 06.00 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து, சம்பவ இடத்தில் நின்றவர்கள் மற்றும் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டருகிலுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில், இன்று மாலை 06.00 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சங்கரன்கோவிலை பிறப்பிடமாகக் கொண்ட இவர், காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவருக்கு, பேட்டையைச் சார்ந்த முஹ்யித்தீன் பாத்திமா (வயது 37) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மகள் ரஹ்மத் ஷமீமா (வயது 13) காயல்பட்டினம் ஜுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பும், மகன் மொகுதூம் ரியாஸ் (வயது 09) கமலாவதி மேனிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.
23.09.1969 அன்று பிறந்த அவர், தனது 41ஆவது பிறந்த நாளான இன்று, காயல்பட்டினம் அருகிலுள்ள காட்டு மகுதூம் பள்ளி தர்ஹாவுக்கு மண்ணறை சந்திப்பிற்காக (ஜியாரத்) இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். வாரந்தோறும் தன் மக்களுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழக்கத்தைக் கொண்ட அவர், காலாண்டுத் தேர்வு நடைபெறுவதால் மகள் வர மறுத்ததையடுத்து, மக்கள் இருவரையும் வீட்டில் தங்கச் செய்துவிட்டு, தன் மனைவியுடன் சென்றுள்ளார்.
காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியை அவர் அடைந்தபோது, எதிரே திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு வந்துகொண்டிருந்த சிற்றுந்து ஒன்று கடும் வேகத்தில் வந்துகொண்டிருந்ததாகவும், அங்கே மரம் ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் நிறுத்த விளக்கு (parking indication light) எரியாததால் மிக அருகில் வந்த பிறகே சிற்றுந்து ஓட்டுனர் சுதாரித்ததாகவும், நொடிப்பொழுதில் வண்டியை வலது புறமாகத் திருப்பியபோது, வேகமாக வந்த காரணத்தால் வண்டி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், இதில் எதிரே மனைவியுடன் வந்துகொண்டிருந்த கலீலுர்ரஹ்மானின் இரு சக்கர வாகனத்தின் மீது சிற்றுந்து நேருக்கு நேர் மோதியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கலீலுர்ரஹ்மான் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற அவரது மனைவி முஹ்யித்தீன் பாத்திமா 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு, திருநெல்வேலி கேலக்ஸி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழமையாகவே கலீலுர்ரஹ்மான் மிதிவண்டியைத்தான் பயன்படுத்துவார் எனவும், தொலைவான இடங்களுக்குச் செல்வதென்றால் மட்டுமே மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்துவார் என்றும், அமைதியான குணம் கொண்ட அவர் எப்போதுமே மிகவும் மெதுவாகவே வாகனம் ஓட்டுவார் என்றும், சிற்றுந்து ஓட்டுநரின் கட்டுக்கடங்காத வேகம் காரணமாகவே அவர் உயிரிழக்க நேரிட்டது என்றும் சம்பவ இடத்தில் நின்றுகொண்டிருந்த அவரையறிந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
தனது பிறந்த நாளன்றே ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் இறக்க நேரிட்டது பரிதாபத்திற்குரியதாகும்.
தகவல் உதவி:
M.T.முஹம்மத் அலீ,
கே.டி.எம்.தெரு, காயல்பட்டினம். |