காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், கல்லூரி நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில், சட்ட உதவிக்கழ துவக்க விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் 23.09.2010 அன்று மதியம் 02.30 மணிக்கு, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
திருச்செந்தூரிலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி மு.ஃப்ரீதா தலைமை தாங்கினார். கல்லூரியின் தொழில் நுட்பத்துறை மூன்றாமாண்டு மாணவி ஏ.ஏ.சி.தாஹா முஃப்லிஹா கிராஅத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. பின்னர், கல்லூரி முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், கல்லூரி செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்செந்தூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.ஜேசுராஜ், அதன் செயலர் ஜே.எஸ்.டி.சாத்ராக், வழக்கறிஞர்கள் டி.எட்வர்ட், பெ.செல்வன் அமுனாஸ் ஆகியோர் சட்ட விழிப்புணர்வு பற்றி உரையாற்றினர்.
கல்லூரியின் சட்ட உதவிக் கழக மாணவியர் செயலாளரும், மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவியுமான எம்.ஏ.ஆயிஷா சித்தீக்கா, சட்ட உதவிக்கழ உறுதிமொழியை முன்மொழிந்து வாசிக்க, சட்ட உதவிக்கழக மாணவியர் அதை வழிமொழிந்தனர்.
பின்னர், திருச்செந்தூரிலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி மு.ஃப்ரீதா, சட்டக் கழகத்தின் பணிகளைப் பற்றி மாணவியருக்கு விரிவாக விளக்கிப் பேசினார்.
நிறைவாக, திருச்செந்தூர் வட்ட சட்டப் பணிக்குழுவின் நிர்வாக உதவியாளர் எஸ்.ஐய்யப்பன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
கல்லூரி இணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், நிர்வாக அதிகாரி முனைவர் எம்.கம்ஸா முகைதீன், கல்லூரி பேராசிரியையர், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் மாணவியர், வழக்கறிஞர்கள் எம்.முஹம்மத் உவைஸ், எஸ்.ஆனந்தி, ஏ.முத்துச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். |