பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்கு என்பது பற்றிய தீர்ப்பு வெளியிடப்படுவதையொட்டி அமைதி காக்குமாறு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) நகர பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பாபர் மசூதி - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு 28.09.2010 தேதிக்குப் பிறகு வரலாம். இதனால் வெற்றி - தோல்வி இரு சாராருக்கும் பொருந்தும். தோல்வியுற்றவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது.
ஆகவே, தயவுசெய்து தீர்ப்பிற்குப் பிறகு தங்கள் உணர்ச்சிகளை எந்த வழியிலும் காட்டக்கூடாது என்றும், முற்றிலுமாக அமைதி காத்திட வேண்டும் என்றும் எல்லா சமுதாய மக்களையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சென்ற 23.09.2010 வியாழக்கிமையன்று இது சம்பந்தமாக நம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, காவல்துறை உயரதிகாரி ஆகியோர் சமுதாயப் பொறுப்பாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தியதோடு, அச்சமயத்தில் மாவட்டம் முழுவதும் அமைதியை நிலவச் செய்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திடுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர். நமது சங்கம் சார்பில் செயலாளர், உதவிச் செயலாளர் ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது மாவட்டம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்திட உங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கிடுமாறு அனைத்து தரப்பு மக்களையும் அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |