தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செயல்பட்டு வரும் தாய்லாந்து தமிழ் சங்கத்தின் புதிய தலைவராக தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வாழும் நம் தமிழ் முஸ்லிம்கள் கடந்த 36 ஆண்டு காலமாக சங்கம் அமைத்து, நம் கலாசாரம் மற்றும் பண்பாட்டைப் பேணிப் பாதுக்கவும், புனித இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களை நம் மக்கள் தெரிந்து கொள்ள வழிசெய்யவும், நம் மக்களிடம் தொழுகை நிலைநாட்டப்படவும், நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகை, வித்ரு தொழுகை, நோன்பு மாதம் கடைசி பத்தில் கியாமுல் லைல் தொழுகை, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, ரமழான் மாதம் இரவில் தொடர் மார்க்கச் சொற்பழிவு, புனித இரவுகளில் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு மஜ்லிஸ், புனித குர்ஆன் விளக்கவுரை போன்றவை மூலம் இஸ்லாமிய பயிற்சியளித்து, அதனடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யவும்,
நமது முன்னோர்களின் நாட்டப்படி நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை வளர்க்கவும், நமது வருங்கால சந்ததியினர் தமிழில் எழுத - பேச – படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற ஆவலுடன் துவக்கப்பட்டதுதான் நமது தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கம். இச்சங்கத்தை துவக்கி வைத்து, “இஸ்லாம் எங்கள் வழி! இன்பத்தமிழ் எங்கள் மொழி!” என கொள்கைப் பிரகடனப்படுத்தினார்கள்.
இச்சங்கத்தின் பணிகள் குறுகிய அளவில் நின்றுவிடாமல், சமுதாயச் சேவையைப் பரவலாக்கிடும் பொருட்டு பள்ளிவாசல் உருவாக்க வேண்டும் என்ற நம் தமிழ் முஸ்லிம் மக்களின் பேராவல் மற்றும் ஆதரவின் காரணமாக, எழில்மிகு பள்ளிவாசல் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இங்கு நம் தமிழகத்தைச் சேர்ந்த முந்தைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நீடூர், கும்பகோணம் பகுதிகளைச் சார்ந்தவர்கள், கீழக்கரை, தொண்டி, சிதம்பரம், காயல்பட்டினம் பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஏறத்தாழ 800 பேர் வசித்து வருகின்றனர். சுமார் 300 குடும்பங்கள் இருக்கின்றன.
இப்பள்ளி மேற்கூறப்பட்ட ஊர் வாசிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதி சார்பாக 9 நபர்கள், கீழக்கரை சார்பாக 5 நபர்கள், கடலூர் மாவட்ட பகுதி சார்பாக 4 நபர்கள், காயல்பட்டினம் சார்பாக 4 நபர்கள், காரைக்கால் பகுதியிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பேங்காக் நகரில் குடியேறிய முன்னோர்களின் குடும்பத்தினர் சிலரும் நிர்வாகத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் நமதூரைச் சார்ந்த ஹாஜி வாவு சம்சுத்தீன் இச்சங்கம் மற்றும் பள்ளியின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 25 நபர்கள் கொண்ட அந்த நிர்வாகக் குழுவில், நமதூரைச் சார்ந்த மௌளவி ஷாதுலி ஆலிம் (கரூர் டிரேடர்ஸ்), எம்.எச்.செய்யது முஹம்மது சாலிஹ் (சன் மூன் ஸ்டார்), எம்.ஏ.முஹம்மது சயீது (தாய் நாடு டிராவல்ஸ்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.செய்யித் முஹம்மத்,
செயலாளர்,
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா),
பாங்காங், தாய்லாந்து. |