காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணிபுரியும் முருகன் என்பவர் மின் இணைப்பு விஷயத்தில் பொதுமக்களை தேவையற்று அலைக்கழிப்பதாக, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாசத்திடம் முறையிடப்பட்டது.
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நேரில் விசாரிப்பதற்காக, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாசம், காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அவரிடம் குற்றச்சாட்டுகளை முறையிடுவதற்காக, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் அதன் செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையில் சங்க நிர்வாகிகளும், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும் திரண்டு சென்றனர்.
காயல்பட்டினம் மின்வாரிய இளநிலை பொறியாளர் முருகன் குறித்து நேரில் அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாசம், மாவட்ட மின்வாரிய அதிகாரியின் முன்னிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த தாம் ஏற்பாடு செய்யப்போவதாகவும், அப்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் குற்றச்சாட்டுக்களை அவரிடம் முறையிடலாம் என்றும் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நம்மிடம் தெரிவித்ததாவது:-
காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றும் திரு.முருகன் என்பவர் மக்கள் துறையை தன் சொந்தத் துறையாக நினைத்து, மின் நுகர்வோரிடமும், புதிய மின் இணைப்பு கோருவோரிடமும் தம் விருப்பப்படி, மின்வாரியாத்தில் இல்லாத புதுப்புது சட்டங்களைக் கூறி, அரசுக்கும், மின் வாரியத்திற்கும் தேவையற்ற அவப்பெயரையும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறார்.
புதிய மின் இணைப்பு கேட்டு மனு செய்தால், குறிப்பிட்ட நபர் நேரில் வர வேண்டும் என்று கூறுகிறார். புதிய மின் இணைப்பு விண்ணப்பத்தில் வீட்டுத் தீர்வை நகல் மற்றும் சோதனைப் படிவத்தை இணைத்தாலே போதுமானது என்றிருக்க, இந்த மாநிலத்திலேயே இல்லாத நடைமுறையாக, வீட்டு வரைபடம் மற்றும் பத்திர நகலை இணைக்க வேண்டும் என்று கூறுகிறார். வீட்டுத் தீர்வை செலுத்திய ரசீதின் நகலை அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் கையொப்பம் வாங்கிக் கொடுத்தாலும் ஏற்காமல், அசல் வீட்டுத் தீர்வை ரசீதுதான் வேண்டும் என்று கூறி மக்களை சிரமப்படுத்துகிறார்.
புதிய இணைப்பு கோரியவர் ஊரில் இல்லாத நேரத்தில் உறவினர்களை அனுப்பி வைத்தால், “உனக்கு எவ்வளவு கமிஷன்?” என்று அனைவர் முன்னிலையிலும் கேவலமாகப் பேசுகிறார். அதே நேரத்தில் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் வந்தால் எந்தவித விசாரணையுமின்றி அவர்களின் மனுவை உடனடியாகப் பெற்றுக் கொள்கிறார்.
இது மட்டுமின்றி, மின்சார மீட்டர் இடமாற்றம் செய்தல், தற்காலிக மின் இணைப்பு பெறுதல், தற்காலிகமாக மின் இணைப்பைத் துண்டித்தல் போன்ற தேவைகளுக்காக செல்லும் மக்களை, மின் வாரியத்திற்கு சிறிதும் சம்பந்தமேயில்லாத சட்டங்களையெல்லாம் கூறி மிகுந்த சிரமப்படுத்துவதுடன், வேண்டுமென்றே அவர்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை காலதாமதம் செய்து, அலுவலகத்தில் தினமும் பிரச்சினைகளை ஏற்படுத்துவது இவரது வாடிக்கையாகிவிட்டது.
பதிமூன்றாயிரம் மின் இணைப்புகளைக் கொண்ட காயல்பட்டினத்தில், அவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு சார்பாக அவர் நடந்து வருகிறார்.
இந்த ஊர் மக்கள் நான்கு வருடங்களாக இவர் மூலம் வேதனைப்பட்டது போதும். இனியும் பொதுமக்கள் அவசியமின்றி வேதனைப்படுவதை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தாலேயே இக்குற்றச்சாட்டுகளை மேலதிகாரியிடம் முன்வைத்துள்ளோம்.
அவர்கள் தெரிவித்தபடி குறித்த காலத்தில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தி, துறை நடவடிக்கை மூலம் தீர்வு காண முயலாத பட்சத்தில், தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இக்குற்றச்சாட்டை வலுவாகக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். |