ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை முடித்தவர் அன்று பிறந்த பாலகன் போலாவார் என்ற கருத்திலான நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜியர், தமது பயணத்தின் துவக்கமாக, தம் வட்டாரங்களைச் சார்ந்த பொதுமக்களை ஒன்றுகூட்டி, அவர்கள் முன்னிலையில், அவர்களுக்கு தாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்காக பொறுப்பு தேடிக்கொள்வர்.
காயல்பட்டினத்தில், ஆண்கள் தமது மஹல்லா பள்ளிவாசல்களுக்கும், பெண்கள் தமது வட்டார தைக்காக்களுக்கும் கடிதங்கள் எழுதுவர். அக்கடிதங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அப்படி கடிதம் பெறப்பட்டதும் அவர்கள் புறப்படும் நேரத்தின்போது அவர்களை வழியனுப்புவதற்காக அப்பள்ளிவாசல்களின் கரும்பலகைகளில் அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் பொதுமக்கள் ஒன்று கூட, மார்க்க அறிஞர் ஒருவர் ஹஜ் குறித்த சொற்பொழிவாற்ற, அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் ஹஜ் பயணியுடன் கைலாகு (முஸாஃபஹா), கட்டித்தழுவல் (முஆனகா) செய்து, அவர்களது ஹஜ் கிரியையகள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமைய பிரார்த்திப்பதோடு, தமக்காக இறைஞ்சுமாறும் கேட்டுக்கொள்வர்.
காயல்பட்டினத்திலிருந்து நேற்று சுமார் 10 ஹாஜியர் தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்திலிருந்து, முத்துநகர் விரைவுத்தொடர்வண்டி மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
சொளுக்கார் தெருவிலிருந்து புறப்பட்டுச் சென்ற பயணி ஒருவருக்கு காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளிவாசலில் வழியனுப்பு நிகழ்ச்சி நேற்று மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. மஹல்லா ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஹஜ் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஹஜ் பயணியைக் கட்டித்தழுவி, கைலாகு செய்து வழியனுப்பி வைத்தனர்.
|