பொதுச்சேவைகளில் தத்தம் கணவருக்கு மனைவியர் உறுதுணையாயிருந்தால், அவர்களால் நகரில் பல நற்பணிகள் நடைபெறும் என்று சிங்கப்பூர் காயல் நல மன்ற பொதுக்கூட்டத்தில், அதன் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தெரிவித்தார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வுகள், 09.10.2010 அன்று மாலை 07.00 மணிக்கு, சிங்கப்பூர் செந்தோஸா பாலவன் கடற்கரையில் நடைபெற்றது.
முன்னதாக, ரம்மியமான அன்றைய மாலைப்பொழுதை கைப்பந்து, கால்பந்து விளையாட்டுக்களுடன் மன்ற உறுப்பினர்கள் உற்சாகமாகக் கழித்தனர்.
பின்னர் துவங்கிய கூட்டத்திற்கு முனைவர் முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். எஸ்.டி.செய்யித் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கிவைத்தார்.
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, பிரார்த்தனையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிற்றுரையும் வழங்கினார். பின்னர் மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இரங்கல் தீர்மானம்:
அண்மையில் காலமான, சிங்கப்பூர் அரசின் மதியுரை அமைச்சர் லீ க்வான் யூ-வின் மனைவியும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியாங் லூங்கின் தாயாருமான திருமதி க்வா ஜியோக் சூ-வின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பின்வருமாறு சில விஷயங்களை இக்கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்:-
உண்டியல் மூலம் நன்கொடை சேகரிப்பு, காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் செய்திகள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதன் நோக்கம் உள்ளிட்ட - 01.10.2010 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
உண்டியல் வசூல் - மக்கள் கருத்துக்கு நன்றி;:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அந்த செயற்குழு செய்தியைப் பார்த்த மக்கள் பாராட்டித் தெரிவித்துள்ள கருத்துக்களை விவரித்துப் பேசிய அவர், அனைத்து உறுப்பினர்களின் கூட்டுமுயற்சியாலேயே இவற்றை சாதிக்க முடிந்தது என்றும், பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுச்சேவைகளில் கணவர்களுக்கு ஊக்கமளியுங்கள்!
தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சமூகத்திற்கு பயனுள்ள நற்சேவைகளை தொய்வின்றி தொடர்ந்து ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் ஆற்றிடும் பொருட்டு, மன்றத்தால் நடத்தப்படும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் அது சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.
மன்றத்தின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு தமது கணவர்களை அனுப்பும் வேலைகளை பெண்கள் ஆர்வத்துடன் செய்துகொடுக்க வேண்டும் என்றும், ஒரு மனைவியாக பொதுச்சேவைகளில் அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் நம் சமுதாயத்திற்கான அவர்களின் பங்களிப்பை மிகுந்த சக்தியும், வீரியமும் மிக்கதாக ஆக்க பெண்களாலேயே இயலும் என்றார்.
அவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்துவதால், அப்பொதுச் சேவைகளில் இறைவனால் தம் கணவருக்கு வழங்கப்படும் அதே நற்கூலிகளை அவர்களுக்குச் சமமாக அவர்களின் மனைவியரும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், வல்ல அல்லாஹ் நம் மன்ற உறுப்பினர்களுக்கு சமூகப் பணிகளில் தேவைப்படும் அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாக வழங்கிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய தலைவர்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, அடுத்த தலைவராக தற்போதைய செயலர் ரஷீத் ஜமானையும், செயலராக தற்போதைய துணைச் செயலர் மொகுதூம் முஹம்மதையும் நியமிப்பது குறித்த தனது விருப்பத்தைத் தெரிவித்த மன்றத் தலைவர், போட்டியின்றி அவ்விருவரையும் தேர்ந்தெடுப்பது குறித்து உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கக் கோரினார்.
அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அக்கருத்தை ஆமோதித்தனர். அவ்வாறு அவர்கள் பொறுப்புகளில் நியமிக்கப்படுகையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் நமது மன்ற உறுப்பினர்களும், நமது காயலர்களும் நிச்சயம் வழங்குவர் என்று தலைவர் தெரிவித்தார்.
கூட்ட நிகழ்வுகள்:
கடந்த செயற்குழுவின்போது விவாதித்து முடிவெடுக்கப்பட்ட அம்சங்கள் குறித்து மன்றச் செயலாளர் ரஷீத் ஜமான் அனைவருக்கும் விவரித்தார்.
மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டத்தில் சமர்ப்பித்த மன்றப் பொருளாளர் எஸ்.எச்.அன்ஸாரீ, வரும் 2010ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மாத சந்தா தொகைகளை உறுப்பினர்கள் இயன்றளவு விரைவாக செலுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
காயலர்களிடமிருந்து உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் குறித்து மன்ற துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் விவரித்தார். பரிசீலனைக்குப் பின், அவற்றுள் சில விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நலிவுற்ற காயலர் குடும்பங்களுக்கு அரிசி, எண்ணெய், சர்க்கரை உட்பட 23 சமையல் பொருட்களடங்கிய பொதிகளை துல்ஹஜ் முதல் நாளன்றே வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழு:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 26.03.2011 அன்று நடத்தப்படும் என்றும், 01.04.2011 முதல் 31.03.2013 வரையுள்ள பருவத்திற்கான மன்றத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அக்கூட்டத்தின்போது தேர்வு செய்யப்படுவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தின் பொதுச் சேவைகளில் ஓரங்கமாக, சிங்கப்பூர் மட்டார் சாலையிலுள்ள அனாதை நிலையத்திற்குச் சென்று உதவிப்பொருட்கள் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பைத் தேடும் பொருட்டு தகுதியுள்ள ஒரு காயலரை சிங்கப்பூருக்கு வரவழைக்க தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் கல்வித்தகுதி, பணியனுபவம், குடும்ப பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்நபர் தேர்வு செய்யப்படுவார் எனவும், தேர்வு செய்யப்படும் அந்நபருக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை அவரது உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளுக்கான செலவுகளை மன்றம் பொறுப்பேற்றுக்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டதோடு, தகுதியும் விருப்பமுமுள்ள காயலர்கள் kwasingapore@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் இல்லாத நிலையில், ஹாஃபிழ் அஹ்மத் துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டம் நிறைவுற்றதும், புது மணமகனும், மன்ற உறுப்பினருமான ஜவஹர் இஸ்மாயில் மற்றும் குடும்பத்தார் அனுசரணையில் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் விருந்தோம்பல் நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களும், புது மணமகனைக் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |