ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் புதிதாகப் பொறுப்பேற்கும்போது புதிய திட்டங்கள் எதையேனும் அறிமுகம் செய்து மக்கள் சேவையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சி.என்.மகேஷ்வரன் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக புதிய திட்டம் ஒன்றை தூத்துக்குடி மாவட்டத்திற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு தமது முறையீடுகளை விரைவாகத் தெரிவிக்க வசதியாக "மக்கள் ஹெல்ப்லைன்” என்ற தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
நேற்று (11.10.2010) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், தாம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற பின்னர் துவக்கமாகக் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஷ்வரன் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் தமது முறையீடுகளைத் தெரிவிக்க தூத்துக்குடியில், "மக்கள் ஹெல்ப்லைன்' என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பிரிவு:
மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ், லேன்ட்லைன் ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இந்த பணிக்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்பப்பட்டு தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இப்புதிய திட்டத்தின்படி, மக்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் மாடியில் அமைந்துள்ள டி.எஸ்.ஓ அலுவலகத்திலுள்ள கணினிப் பிரிவில் தனியாக இண்டெர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர், செல்போன், லேன்ட்லைன் போன் ஆகியவற்றை கொண்ட வசதி உடனடியாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குரிய அடிப்படை பிரச்னைகள் தொடர்பான குறைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் குறைபாடுகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதற்காக இந்த மக்கள் ஹெல்ப்லைன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு என்று தனியாக பணியாளர் ஒருவர் கம்ப்யூட்டரில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை இருப்பார்.
பொதுமக்கள் தமது குறைகளை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., லேன்ட் லைன் தொலைபேசி அழைப்பு மூலமாகவோ இங்கு தெரிவிக்கலாம்.
மின்னஞ்சல் மூலம் குறைகளைத் தெரிவிக்க,
collrtuthelpline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்,
கைபேசி (மொபைல் ஃபோன்) குறுச்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் தெரிவிக்க,
8903440012 என்ற எண்ணிற்கும்,
லேன்ட் லைன் தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்க,
0461-2340012 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
அவற்றைப் பதிவுசெய்யும் ஊழியர் உடனடியாக அத்தகவலை மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிப்பதோடு, சம்பந்தப்பட்ட துறைக்கும் அந்த முறையீட்டைத் தெரிவிப்பார். இப்பணியை நான் அடிக்கடி ஆய்வு செய்வேன். சம்பந்தப்பட்ட துறையினர் அதன் மீது எடுத்த நடவடிக்கை விபரத்தை மக்கள் ஹெல்ப்லைனுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட துறை மூலமாகவோ முறையீடு செய்தவருக்கும் நடவடிக்கை விபரம் குறித்த பதிலும் தெரிவிக்கப்படும்.
இத்திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படும் நாட்கள் அனைத்திலும் செயல்படும். மக்கள் இப்புதிய திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை ஆய்வு:
இது குறித்து வாரத்திற்கு ஒரு முறை ஸ்பெஷல் ஆய்வும் நேரடியாக மேற்கொள்ள உள்ளேன். அரசு எல்லோருக்கும் நல்ல சம்பளம் வழங்குகிறது. இந்த சம்பளம் வழங்குவது மக்களுக்கு பணி செய்வதற்குத்தான். அத்தகைய பணிகளை செம்மையாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவகனாக ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றினால் சிறப்பான மாவட்டமாக இம்மாவட்டத்தை எளிதில் உருவாக்கிவிடலாம்.
மக்களின் அடிப்படை உரிமைகள் சிறப்பாக கிடைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் இருக்க வேண்டும். இவையிரண்டும்தான் முக்கியத்துவம். அதற்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
மழைக்கால முன்னேற்பாடுகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அதிகமாக மழை பெய்யக் கூடிய மாதங்களாக இருக்கிறது. மழைக் காலத்தில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் முற்கூட்டியே செய்யவேண்டும் என்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆணையர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரன் தெரிவித்தார். நிக்நெட் அதிகாரி குமார், உதவி அதிகாரி ரமேஷ், ஆகியோர் உடனிருந்தனர். |