கடந்த 14.10.2010 அன்று காலமான, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியரும், முன்னாள் மாணவருமான ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
17.08.2010 அன்று இரவு 08.00 மணிக்கு நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு ஹாமிதிய்யாவின் கவுரவ பேராசிரியர் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார்.
துவக்கமாக கத்முல் குர்ஆன் ஓதி, மறைந்த ஆசிரியர் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பின்னர் இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டன. துவக்கமாக மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ உரையாற்றுகையில்,
மறைந்த மாணவர் 1986ஆம் ஆண்டு ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவில் மாணவராகச் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு ஹாஃபிழ் பட்டம் பெற்றார். மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை, மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன், ஹாஃபிழ் ஏ.எஸ்.நஸீம் ஷிஹாபுத்தீன், ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா உள்ளிட்ட ஏழு மாணவர்கள் அவருடன் இணைந்து ஸனது (பட்டம்) பெற்றனர்.
மத்ரஸாவின் மார்க்கக் கல்வி - தீனிய்யாத் பிரிவிலும் மாணவராக இருந்த அவர் தான் படித்த காலங்களில் முதல் மாணவராகவே திகழ்ந்துள்ளார். ஒழுக்க விஷயத்தில் மிகுந்த பேணிக்கையுள்ளவர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்திற்காக HAMIDHIYYA INFORMATION SYSTEM - HIS என்ற பெயரில் கணினி மென்பொருள் ஒன்றை உருவாக்கித் தந்துள்ளார். அந்த மென்பொருள் மூலம், மத்ரஸாவின் ஹிஃப்ழுப் பிரிவு, தீனிய்யாத் பிரிவு மாணவர்கள் மத்ரஸாவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரையிலான நடவடிக்கைக் குறிப்புகளைப் பதிவு செய்திடவும், தேவைப்படும் நேரங்களில் உடனுக்குடன் பார்வையிடவும் முடியும்.
தான் உடல் நலம் குன்றியிருந்த நேரத்திலும் தன்னைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தன் நண்பர்களுக்கும், இதர மக்களுக்கும் ரகசியமாக தர்மம் செய்து வந்துள்ளார்... என்றார்.
அவரைத் தொடர்ந்து, ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா உரையாற்றுகையில்,
அக அழகு, முக அழகு இரண்டையும் ஒருசேரப் பெற்றிருந்த இளவல் ஷாஹுல் ஹமீத், அமைதியின் மொத்த உருவமாகத் திகழ்ந்தார். யாரிடமும் எதற்காகவும் கடிந்தோ, இரைந்தோ பேசி நான் அவரை ஒருபோதும் கண்டதில்லை. தனது நற்பண்பால் பெற்றவர்களுக்குப் பெருமை சேர்த்த அவர் ஓர் அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்தார் என்றார்.
அடுத்து உரையாற்றிய ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ,
இந்த மத்ரஸாவில் எத்தனையோ மாணவர்கள் கற்றுச் சென்றுள்ளனர். ஆனால் என்றும் நன்றி விசுவாசத்துடன் நடந்துகொண்ட மாணவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
நான் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் அரபி மொழி ஆசிரியராக இருந்தபோது, இவரது தேர்வு விடைத்தாளைப் பார்த்து வியப்புற்றிருக்கிறேன். தமிழில் எழுத வேண்டிய சில விடைகளைக் கூட தனது அபார அறிவாற்றலால் அரபியிலேயே எழுதி எங்களை மெய்ச்சிலிர்க்க வைத்தவர்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒருநாள் நபித்தோழர்கள் உடனிருக்க, அவ்வழியே ஒரு ஜனாஸா அடக்கத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது... அவரைப் பற்றி மக்கள் நல்ல விதமாக சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நபிகளார் அவர்கள் “வஜபத்” – உறுதியாகிவிட்டது என்றார்கள்.
அடுத்து ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்படுகிறது... நபித்தோழர்கள் அவரைப் பற்றி தீய விதமாக சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நபிகளார் அவர்கள் “வஜபத்” – உறுதியாகிவிட்டது என்றார்கள்.
இதுபற்றி, நபித்தோழர்கள் நபிகளாரிடம் விளக்கம் கேட்டபோது, நீங்கள் நல்ல விதமாக சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தவருக்கு சுவர்க்கம் உறுதியாகிவிட்டது என்பதற்காக “வஜபத்” என்றேன். நீங்கள் கெட்ட விதமாகப் பேசிக் கொண்டிருந்தவருக்கு நரகம் உறதியாகிவிட்டது என்பதற்காக “வஜபத்” என்றேன் என்றார்கள்.
அந்த அடிப்படையில், இந்த நல்ல மாணவரைப் பற்றி நாம் நல்ல விதமாக இங்கே சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக அவருக்கு இறைவனருளால் சுவனம் கிட்டும் என்று தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய மத்ரஸா ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ,
மறைந்த மாணவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவர் நம்மோடு இருக்க நாமெல்லாம் ஆசைப்பட்டோம். ஆனால் அவரது அவதியைப் போக்கி அல்லாஹ் அவனோடு வைத்துக் கொண்டான்.
ஒரு நோயாளி தன் நோயைப் பொருந்திக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்ற நபிமொழிக்கேற்ப வாழ்ந்து மறைந்துள்ள மாணவர் என்.எச்.ஷாஹுல் ஹமீத் - தான் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை கருணையுள்ள ரஹ்மான் மன்னித்தருள்வானாக... என்று கூறினார்.
இறுதியாக மத்ரஸா பேராசிரியரும், சிங்கப்பூர் ஜாமிஆ சுலியா பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன்,
மாணவரின் மறைவிற்குப் பின் அவரது குடும்பத்தில் ஒருவர் கண்ட கனவில், அவர் எந்த உணவையும் திருப்தியாக உண்ண முடியாத நிலை குறித்து கவலையுடன் அவரது தாயார் அங்கலாய்த்துக் கொண்டிருக்கையில், “ஏன் கவலைப் படுகிறீர்கள்...? எனக்கு அல்லாஹ் சுவனத்திலிருந்து தந்துள்ள உணவை நான் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்...” என்றாராம். அல்லாஹ் அந்த கனவை மெய்ப்படுத்தி வைப்பானாக... என்று தெரிவித்தார்.
மறைந்த ஆசிரியரின் தந்தை ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், குருவித்துறைப் பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர், அப்பள்ளியின் இமாம் மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீ, மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர்கள் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப், ஓமன் காயல் நல மன்ற துணைத்தலைவர் டாக்டர் நூருத்தீன் உட்பட, மத்ரஸா ஹாமிதிய்யாவின் ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், நகரப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். |