காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசல் அருகே மழை நீர் வடிகாலுக்காக வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு, சின்ன நெசவுத் தெரு, கே.டி.எம். தெரு, அலியார் தெரு மற்றும் இதர பகுதிகளிலிருந்து மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், மூப்பனார் ஓடை, நார ஓடை என்றழைக்கப்படும் தாயிம்பள்ளிவாசலையொட்டிய பெரிய நெசவுத் தெருவிற்குச் செல்லும் சாலையில், சங்கமிக்கும். கனமழை காலங்களில் மழை நீர்த்தேக்கம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இவ்விடம் பெரியதொரு வாய்க்கால் போல காட்சியளிக்கும்.
இப்பகுதி நகர்மன்ற உறுப்பினரும், காயல்பட்டினம் நகர தி.மு.க. துணைச் செயலாளருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனின் தொடர்கோரிக்கையின் பேரில், காயல்பட்டினம் நகர்மன்ற பொது நிதியிலிருந்து எட்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் செலவில் இப்பகுதியில் மழை நீர் வடிகாலுக்காக வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது.
தாயிம்பள்ளிவாசல் அருகில் துவங்கி, கே.எம்.டி. மருத்துவமனையோடு ஒட்டிய ஓடை வரை இந்த வாய்க்கால் அமைக்கப்படுகிறது. சுமார் ஒரு மாத காலம் இப்பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர்மன்ற உறுப்பினர் மும்பை முகைதீன் தெரிவித்தார்.
தாயிம்பள்ளிவாசல் இமாம் அஹ்மத் காஸிம், கனி, வி.எஸ்.எல்.அப்துல்லாஹ் ஸாஹிப், கோப்பி மக்கீன், சலூன் சாமு உள்ளிட்டோர் வாய்க்கால் அமைப்புப் பணியை பார்வையிட்டனர்.
|