மினாவில் ஜமாரத் பகுதி செய்தானை கல்லடிக்க வேண்டிய பகுதியாகும். ஹஜ் வேளைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இங்கு இருக்கும். 1994ம் ஆண்டு 270 பேர், 1998ம் ஆண்டு 118ம் பேர், 2001ம் ஆண்டு 35 பேர், 2003ம் ஆண்டு 14 பேர், 2004ம் ஆண்டு 251 பேர் மற்றும் 2006ம் ஆண்டு 346 பேர் ஜமாரத் பாலங்களில் ஏற்பட்ட நெரிசல்களில் உயிர் இழந்துள்ளனர்.
இத்தொடர் விபத்துகளுக்கு பின்னர் சவுதி அரசாங்கம் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்தது. ஜமாரத்தில் புதிய பாலங்கள் மற்றும் வசதிகளுக்காக அமெரிக்க டாலர் 110 கோடிக்கு (இந்திய ரூபாய் சுமார் 5000 கோடி) திட்டங்களை அறிவித்து முழவதுமாக வேலைகள் யாவும் முடிவுற்றுள்ளன.
கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலங்கள் 5 மாடி கொண்டதாகும். அனைத்தும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டவை. வெப்பத்தை 29 டிகிரி வரை குறைக்க தண்ணீர் தெளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. யாத்ரிகர்கள் 5 மாடிகளில் இருந்தும் இப்போது செய்தானை கல்லெறியலாம். செய்தானை குறிக்கும் விதமாக மூன்று பெரிய பாறைகள் நிறுவப்பட்டுள்ளன. மணிக்கு 300,000 யாத்ரிகர்கள் வரை தாங்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பாலம் 950 மீட்டர் நீளமும், 80 மீட்டர் அகலமும் கொண்டதாகும். ஒவ்வொரு மாடியும் 12 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்போது 5 மாடிகள் கொண்டதாக இருந்தாலும் வருங்காலத்தில் தேவைப்பட்டால் 12 மாடிகள் அளவுக்கு உயர்த்தவும், 50 லட்ச யாத்ரிகளை வரை தாங்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தரை மற்றும் இரண்டாம் மாடி மினாவிற்கு கிழக்கில் இருந்து வருபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மாடி மக்கவிலிருந்தும், அல் அடல் மற்றும் அல் சேஷா பகுதிகளில் இருந்தும் வருபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காம் மாடி வடக்கில் இருந்தும், கிழக்கு மற்றும் மேற்கு சேப்ஸ் பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் மாடி அல் அஜிசியா மற்றும் மினாவிற்கு தெற்கு முகாம்களில் இருந்து வருபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நாலு திசைகளையும் நோக்கி 12 நுழைவு மற்றும் 12 வெளிசெல்லும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவசியமான அளவுக்கு கழிவறைகள், உணவு மற்றும் முடிதிருத்தும் கடைகள், மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்புக்கான பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேல் மாடியில் நவீன கூடாரங்கள் மூன்று அமைக்கப்பட்டுள்ளது. எஸ்கலேட்டர் போன்ற நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வான்வழி முதலுதவி ஊர்தி (AIR AMBULANCE) இறங்க தளங்களும் (HELIPADS) அமைக்கப்பட்டுள்ளது.
|