ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்கள் மஷேர் பகுதியில் என்ன வசதி எதிர்பார்க்கலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. செய்தி அறிக்கை ஒன்றில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
துல்ஹஜ் 7 இரவு மற்றும் துல்ஹஜ் 8 காலையில் மக்காவிலிருந்து மினா நோக்கி ஹஜ் யாத்ரிகர்களை முஅல்லிம்கள் அழைத்து செல்வார்கள். 8 கிலோ மீட்டர் தூர இப்பயணத்தை சுமார் 20 லட்சம் பேர் ஏறத்தாழ ஒரே நேரத்தில் செய்வர். செல்லும் வழியில் வாகனங்கள் பழுது அடைவதும் உண்டு. ஆகவே இச்சிறு தூரத்தை கடக்க பல மணி நேரங்கள் ஆகலாம். எனவே யாத்ரிகர்கள் பொறுமை காப்பது மிக அவசியம்.
மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒன்றுபோல் இருக்கும். எனவே யாத்ரிகர்கள் தங்களின் முஅல்லிம் எண்களை குறித்து கொள்வது மிக அவசியம். மேலும் கூடாரங்களின் கம்புகளில் குறிக்கப்பட்டுள்ள எண்களையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இந்தியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கூடாரங்களின் அருகில் உள்ள பாலங்களில் இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டிருக்கும். கூடாரங்களில் காணாமல் போவது சாதாரணமாக காணக்கூடியது. ஆகவே யாத்ரிகர்கள் கவனமாக இருப்பது மிக அவசியம்.
மேலும் யாத்ரிகர்கள் சுத்தமற்ற உணவு கடைகளில் இருந்து உணவுகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பழங்களையும், பாதுகாப்பான பிற உணவு வகைகளையும் உட்கொள்வதே சிறந்ததாகும்.
துல்ஹஜ் 8 இரவு மற்றும் துல்ஹஜ் 9 காலையில் மினாவிலிருந்து அரபா மைதானம் நோக்கி யாத்ரிகர்கள் செல்வார்கள். 14 கிலோ மீட்டர் தூர இப்பயணத்தை சுமார் 20 லட்சம் பேர் ஏறத்தாழ ஒரே நேரத்தில் செய்வர். போகும் வழியில் பல காரணங்களுக்காக பயணம் தாமதம் ஆகலாம். எனவே அப்பயணத்தை நடந்தே முடிக்க யாத்ரிகர்கள் தயாராக இருக்க வேண்டும்.
துல்ஹஜ் 9 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் யாத்ரிகர்கள் அரபாவிலிருந்து முஜ்தலிபா நோக்கி புறப்படவேண்டும். அரபாவிலிருந்து முஜ்தலிபா சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு சென்றடைய போக்குவரத்து காரணமாக பல மணி நேரங்கள் ஆகலாம். ஆகவே யாத்ரிகர்கள் இத்தூரத்தை நடந்து கடக்க தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். யாத்ரிகர்கள் இரவை முஜ்தலிபாவில் கழிக்க வேண்டும். இங்கும் தங்க இடம் மிக குறைவே.
முஜ்தலிபாவில் சுபுஹு தொழுகையை முடித்துவிட்டு துல்ஹஜ் 10 காலையில் யாத்ரிகர்கள் மினா நோக்கி மீண்டும் செல்லவேண்டும். இது 6 கிலோ மீட்டர் தூர பயணம் ஆகும். பிற இடங்களை போல் இத்தூரத்தை கடக்கவும் பல மணி நேரங்கள் ஆகலாம். ஆகவே பிற இடங்களை போல் இத்தூரத்தையும் நடந்தே கடக்க யாத்ரிகர்கள் தயாராக இருக்க வேண்டும்.
துல்ஹஜ் 10 அன்று மினாவை அடைந்தவுடன் யாத்ரிகர்கள் ஜமாரத்திற்கு (செய்தானை கல் எறியும் இடம்) செல்ல தங்கள் முஅல்லிம்களை அணுக வேண்டும். முஅல்லிம்கள் கொடுக்கும் நேரத்தில் மட்டும் ஜமாரத்திற்கு சென்று கல் எறியவேண்டும். ஜமாரத்திற்கு செல்லும் போது தங்கள் கைப்பொருட்கள் எதையும் யாத்ரிகள் கொண்டு செல்ல கூடாது. அவ்வாறு கொண்டு சென்றால் ஜமாரத்தில் உள்ள காவலர்கள் கைப்பொருட்களை கைபற்றி குப்பையில் வீசிவிட நேரிடும். நடக்க முடியாதவர்கள் கல் எரியும் பொறுப்பினை வேறொருவரிடம் கொடுக்க வேண்டும். ஜமாரத்தில் சக்கர நாற்காலிக்கு அனுமதி கிடையாது.
முடிவெட்டுவதை அனுமதிக்கப்பட்ட, சுகாதாரமான முடி வெட்டும் கடைகளிலேயே செய்யவேண்டும். அனுமதிக்கப்படாத கடைகளில் முடிவெட்டுவது சுகாதாரமற்றது மற்றுமன்றி சவுதி சட்டங்களுக்கு புறம்பானது. மேலும் மினா பகுதியை யாத்ரிகர்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மினாவில் இருக்கும் காலங்களில் துப்புரவு பணிகள் நடப்பது அரிது.
|