கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில், 14.08.2011 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி கோழிக்கோடு ஸ்டேடியம்-புதியரா சாலையில் அமைந்துள்ள கே.எம்.ஏ.அரங்கில் நடைபெற்றது. இதில் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில், 14.08.2011 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி கோழிக்கோடு ஸ்டேடியம் - புதியரா சாலையில் அமைந்துள்ள கே.எம்.ஏ.அரங்கில் நடத்தப்பட்டது.
மன்றத் தலைவர் மஸ்வூத் தலைமை வகிக்க, செயலாளர் ஹைதுரூஸ் ஆதில், துணைத் தலைவர் ரஃபீக், துணை செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்ட நிகழ்வுகள்:
முன்னதாக, அன்று மாலை 05.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் அனைவரும் சங்கமித்தனர். மன்றத்தின் துணைத் தலைவர் முஹம்மத் ரஃபீக் அவர்களது மகள் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பெண்களும் கலந்துகொண்டதைக் கருத்திற்கொண்டு, அவர்களும் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மன்றத்தின் வரவு - செலவு பற்றியும், பல்வேறு தேவைகளுக்காக பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள காயலர்களிடமிருந்து உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பற்றியும், அவை முறையாக பரிசீலிக்கப்படும் விதம் பற்றியும் விரிவாக அவர் தனதுரையில் எடுத்துரைத்தார்.
மருததுவ தேவைக்கு உதவுவதை மன்றம் மிக முக்கியமாகக் கருதுவதாகவும், எனவே மருத்துவத் தேவைக்காக பொருளாதார உதவிகள் தேவைப்படுவோர் தயங்காமல் MKWA மன்றத்தை அணுகலாம் என்றும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் கோரப்படும் உதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கூட எதிர்பாராமல் உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
வாழ்த்துரை:
பின்னர், மன்றத்தின் துணைத் தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS வாழ்த்துரை வழங்கினார்.
MKWAவின் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் இத்தனை பேர் கலந்துகொண்டுள்ளதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், குறுகிய காலத்தில் மன்றம் கண்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வியக்காதவர்கள் மிகக் குறைவு என்று தெரிவித்தார்.
மன்றம் துவங்கி குறைந்த காலமே ஆனபோதிலும், இதுவரை அது ஆற்றியுள்ள நற்சேவைகள் அதிகம் என்று தெரிவித்த அவர், இன்னும் இம்மன்றத்தை நகர்நலப் பணிகளில் வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமென்றும், அதற்கு Vitamin M எனும் பொருளாதாரம் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்த அவர், இதனைக் கருத்திற்கொண்டு, மன்ற உறுப்பினர்கள் தமது நன்கொடைகளை அதிகளவில் மன்றத்திற்கு வழங்கியுதவ வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இஃப்தார் நிகழ்ச்சி:
பின்னர் அரங்கின் மேல்தளத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்றனர். அங்கு காயல் கஞ்சி, சாலாவடை, பக்கோடா, குளிர்பானங்கள், பழ வகைகள் என பலவிதமான உணவுப் பதார்த்தங்கள், இந்நிகழ்ச்சியின் உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவம், சுவைபடவும் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின் மஃரிப் தொழுகை அங்கேயே கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு அரங்கின் கீழ் தளத்தில் நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது.
சிறப்புரை:
அவ்வமர்வில், ‘நோன்பின் சிறப்பும், முக்கியத்துவமும்‘ என்ற தலைப்பில் மன்றத் தலைவர் மஸ்ஊத் சிறப்புரை நிகழ்த்தினார்.
ரமலானில் ஆர்வத்துடன் செய்யப்பட வேண்டிய நற்செயல்கள், மேற்கொள்ள வேண்டிய பொறுமை, நோன்பின் சட்டங்கள் குறித்து தனதுரையில் அவர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
நன்றியுரை:
நிறைவாக, மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
கூட்டத்தில் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
விருந்துதோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் மீண்டும் மேல் தளத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு, காயலருக்கே உண்டான பாணியில் இடியாப்பம், புரோட்டா, களறிக்கறி என சுவையான உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
விருந்து நிகழ்ச்சி நிறைவுற்றதும் அனைவரும் தத்தம் இருப்பிடங்களுக்குக் கலைந்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இஃப்தார் நிகழ்வுகளின் அனைத்து படங்களையும் தொடர்காட்சியாகப் பார்வையிட, மன்றத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள https://picasaweb.google.com/118060368090967667702/August162011?locked=true&feat=email#slideshow/5641186632753947938 என்ற இணைப்பில் சொடுக்குக!
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (SEENA),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம். |