தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள, சமச்சீர் கல்வி தரமானதாக இல்லாததால், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும், 40 லட்சம் மாணவ, மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்கு மண்டல கோரிக்கை மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்க வந்த, கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வியை, மெட்ரிக் பள்ளிப் பாடத்தோடு ஒப்பிடுகையில், தரம் குறைவாக உள்ளது. மெட்ரிக் பள்ளியில், 04ஆம் வகுப்பில் படித்ததை, சமச்சீர் கல்வியில் 07ஆம் வகுப்பில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், கல்வித் தரம் குறைந்து, அகில இந்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியாத நிலை உருவாகும்.
எனவே, சமச்சீர் கல்வியின் தரத்தை, நிறைவாகவும் செறிவாகவும் மேம்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியால், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும், 40 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ளதைப் போல, அனைத்து பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் இணை பாடத் திட்டமாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை விரும்பும் மாணவர்கள் படிக்கும் வகையில், தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
ஆந்திராவில், நகரத்துக்கு இணையாக, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வியைப் போதிக்க அம்மாநில அரசு, 2008இல், "சக்சஸ்' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, கிராமப்புறங்களில், 6,500 நடுநிலைப் பள்ளிகளைத் தேர்வு செய்து, அப்பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை, ஆங்கில வழியில் அறிமுகம் செய்தது.
எனவே, தமிழகத்திலும் ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.சி., கல்வி பாடத் திட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும். தரம் குறைந்த சமச்சீர் கல்வியால், தமிழர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலை உருவாகி விடும். தமிழகத்தில், 40 லட்சம் மெட்ரிக் மாணவ, மாணவிகள் படிக்க ஏதுவாக, சி.பி.எஸ்.இ., இணை பாடத் திட்டம் கொண்டு வரவேண்டும்.
மெட்ரிக் பள்ளிகளை, அரசே ஏற்று நடத்துவது இயலாத காரியம் என்பதால், தனியார் பள்ளிகளின் கோரிக்கையை, அரசு ஏற்க வேண்டும். தேர்தலின் போது, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததைப் போல, கல்விக் கட்டண குளறுபடிகளைக் களைய, பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட, முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநிலச் செயலர் இளங்கோவன், பொருளாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் உட்பட, சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
நன்றி:
தினமலர் (16.08.2011) |