தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்தபடி, வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை, நகர்மன்ற தலைமை தேர்தல் அலுவலராக உள்ள நகர்மன்ற ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
23.09.2011 அன்று காலை 11.00 மணிக்கு, காயல்பட்டினம் கே.எம்.கே. தெரு, ஆறாம்பள்ளித் தெரு, மக்தூம் தெரு, முஹைதீன் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 05ஆம் வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, குறுக்கத் தெருவைச் சார்ந்த காழி அலாவுத்தீன் என்ற சட்னி காழி வேட்புமனு தாக்கல் செய்தார்.
காயல்பட்டினம் சித்தன் தெரு, துஷ்டராயன் தெரு (ஆஸாத் தெரு), அம்பல மரைக்கார் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 06ஆம் வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, ஆஸாத் தெருவைச் சார்ந்த காதர் அஹ்மத் அலீ என்பவரின் மகன் சர்புதீன், இன்று காலை 11.00 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காயல்பட்டினம் சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காய் பண்டகசாலை, மாட்டுக்குளம் (சுலைமான் நகர்), கடற்கரை பூங்கா வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 08ஆம் வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கொச்சியார் தெருவைச் சார்ந்த அய்யூப் என்பவரின் மனைவி எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், இன்று மதியம் 02.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுக்களை, காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர் காளிதாஸ் பெற்றுக்கொண்டார்.
[செய்தியில் ஒரு படம் தாமதமாக இணைக்கப்பட்டது.] |