அக்டோபர் 17 அன்று காயல்பட்டின நகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் - நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு ரஃப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ. ஆபிதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் தந்தை பாளையம் இப்ராகிம் ஆவார். இவரின் கணவர் எம்.எம். சேக் அப்துல் காதர். 38 வயது நிரம்பிய ஆபிதா - B.Sc. , B.Ed. பட்டதாரி ஆவார்.
தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை தெரிவித்து - நகரில் உள்ள அனைத்து ஜமாஅத்துக்களுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் அவர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
12 ஆண்டுகளாக காயல்பட்டணம், மகுதூம் தெருவில் ரஃப்யாஸ் ரோசெரி மழலையர் பள்ளி நடத்தி வரும் நான் நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில் நகராட்சி மன்ற தலைமை பதவிக்கு எந்த ஒரு கட்சியையோ, அமைப்பையோ, தனிப்பட்ட நபர்களையோ சார்ந்தில்லாமல் மக்களின் பிரதிநிதியாக, மக்களின் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் மக்கள் மூலமாக தரும் தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்வேன். இறைவன் மீது ஆணையாக எந்த ஒரு சூழலிலும் சத்தியத்திற்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் அனைத்து மக்களின் ஒருமித்த குரலுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், அதிகார போக்கிற்கும், அநீதிக்கும், ஊழலுக்கும் எதிராக என்றும் குரல் கொடுப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவனின் கிருபையோடு அனைத்து சமுதாய மக்களின் மகத்தான ஒத்துழைப்போடு, நகராட்சி உறுப்பினர்களாக வருகின்ற சகோதர, சகோதரிகளின் உறுதுணையோடு, இளைய சமுதாயத்தினரின் எழுச்சிமிகு ஊக்கத்தோடு, புதிய நற்சிந்தனைகளோடு, அனைத்து ஜமாஅத்துக்களின் பக்கபலத்தோடு நல்ல திட்டங்களை செயல்படுத்தி, சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தி காயல் மாநகரை முன் மாதிரி நகரமாகக இறை உதவிக்கொண்டு சிரியவளாகிய நான் என்னால் முடிந்த அளவிற்கு முயற்சிகள் செய்து முன்னேற்றம் ஏற்பட வழி செய்வதற்குரிய வலிமையை தர என்னை படைத்தது வழிநடத்தும் வல்ல நாயனிடம் வேண்டுகிறேன்.
நான் இந்த பதவிக்கு தகுதியானவள் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் உங்களின் அன்பான ஆதரவும், மனதார ஒத்துழைப்பும் வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
என்றும் மக்கள் பணியில்,
உங்கள் அன்பு சகோதரி,
ஆபிதா.
இவ்வாறு தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
|