காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுற்றது.
27.05.2012 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், கோழிக்கோடு - யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணியும், திருவனந்தபுரம் - ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும் களம் கண்டன.
ஆட்டத்தின் 07ஆவது நிமிடத்தில், கோழிக்கோடு அணியினர் பந்தை கோல் எல்லைக்குள் கடத்திச் சென்றபோது, திருவனந்தபுரம் வீரர் ஒருவர் கையால் அதைத் தடுத்துவிட்டதால், பெனாலிட்டி - ஃப்ரீ கிக் வாய்ப்பு கோழிக்கோடு அணிக்குக் கிட்டியது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவ்வணி வீரர் ப்ரசாத் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில், பந்து பெரும்பகுதி திருவனந்தபுரம் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், அவர்களால் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. இந்நிலையில், ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில், கோழிக்கோடு வீரர் உபைத் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
பின்னர், ஆட்ட இறுதி வரை போராடியும் திருவனந்தபுரம் அணி கோல் எதுவும் அடிக்காததால், கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணி வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.
மஃரிப் தொழுகைக்குப் பின் இரவு 07.00 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் எல்.கே.பள்ளிகளின் தலைவர் டாக்டர் அஷ்ரஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுப்போட்டிக் குழு செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் மூஸல் காழிம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, ஐக்கிய விளையாட்டு சங்க துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி சுங்க இலாகா ஆணையாளர் சி.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், விழாவில் முன்னிலை வகித்தோருக்கும், சிறப்பு விருந்தினருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. இதில், இறுதிப்போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கான தனிப்பரிசுகள், சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசு, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் பால் பாய்ஸ்-க்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை, சிறப்பு விருந்தினரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும் வழங்கினர்.
பின்னர், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு சிறந்த பயிற்சியளித்தமைக்காக, தேசிய அணிகளில் விளையாடி வரும் காயல்பட்டினத்தைச் சார்ந்த கால்பந்து வீரர் காழி அலாவுத்தீனுக்கு ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினரால் பரிசளிக்கப்பட்டது.
பின்னர் வெற்றிக்கு முனைந்த அணியான திருவனந்தபுரம் - ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணிக்கு ரூ.20,000 பணப்பரிசு மற்றும் கோப்பையை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அணியான, கோழிக்கோடு - யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணிக்கு, ரூ.25,000 பணப்பரிசு மற்றும் கோப்பையை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
முன்னதாக, ஆட்டத்தின் இடைவேளையின்போது, கொடி - பேண்டு வாத்திய அணிவகுப்புடன் சிறப்பு விருந்தினருக்கு ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்றுப்போட்டிக் குழுவினர், இரு அணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னர், இரு அணி வீரர்களும் தமக்குள் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்.
அதன்பிறகு, சிற்றுண்டியுபசரிப்பு நடைபெற்றது.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர்முக வர்ணனையுடன் அசைபட நேரலை செய்யப்பட்டது. காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான சிறப்புப் பக்கத்தில் உள்ள “நேரடி ஒளிபரப்பு” என்ற இணைப்பில் இந்நேரலையைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எம்.டி.ஹபீப் ஒளிப்பதிவாளராக செயல்பட்டார். ஹாஃபிழ் ஏ.முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, ஹாஃபிழ் பி.ஏ.உக்காஷா ஆகியோர் நேர்முக வர்ணனை செய்தனர்.
போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
|