காயல்பட்டினம் கற்புடையார்ப்பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை) - 169 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் அக்டோபர் மாதம் 2010 இல் துவங்கின. அக்கட்டுமானங்களை எதிர்த்து நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை தற்போது அமலில் உள்ளது.
இக்கட்டுமானம் குறித்த தற்போதைய நிலையினை அறிய - காயல்பட்டணம்.காம் சில மாதங்களுக்கு முன் - தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு வழங்கப்பட்ட பதிலில் - கட்டுமான பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் (சர்வே எண்கள் 358/2B, 358/2C மற்றும் 360/2B) - CRZ 1 பிரிவில் இருந்து CRZ 2 பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், அதனை தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட வரைப்படம் - காயல்பட்டினத்தை உள்ளடக்கிய Coastal Zone Management Plan (CZMP) தாள் எண் 27 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து - காயல்பட்டணம்.காம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் CZMP தாள் எண் 27 உடைய நகலை நகர் ஊரமைப்பு இயக்கத்திடம் (Directorate of Town and Country Planning) கேட்டிருந்தது. காயல்பட்டணம்.காம் உடைய கோரிக்கை - சென்னையில் உள்ள சுற்றுப்புற சூழல் துறைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலும் தற்போது பெறப்பட்டுள்ளது.
பதில் வழங்கியுள்ள சுற்றுப்புற சூழல் துறையின் துணை இயக்குனர், கடந்த 16 ஆண்டுகளில் - CZMP தாள் எண் 27 இல் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசின் ஒரு துறை - CZMP Sheet No.27 மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் கட்டுமான பணிகளுக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. ஆனால் - அரசின் மற்றொரு துறையோ, அந்த தாளில் (CZMP Sheet No.27) - கடந்த 16 ஆண்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறுகிறது. இதில் யார் கூற்று உண்மை?
|