காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டுக் குழு, பெங்களூரு காயல் நல மன்றம் இணைந்து, காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை இம்மாதம் 21ஆம் தேதி நடத்தின. இந்நிகழ்ச்சி குறித்து, KCGC சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே.
காயல்பட்டினம் நகரத்தைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு முறையான கல்வி வழிகாட்டுதலை அளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில், இம்மாதம் 21ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 02.30 மணி வரை, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC), பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) சார்பில் கல்வி வழிகாட்டு முகாம் நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கு சிறப்பழைப்பு:
இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கோரி, நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சார்ந்த 09, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு அவரவர் முகவரிக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதுபோல, இம்முகாம் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பிரசுரங்கள் நகர ஜும்ஆ பள்ளிகளிலும், ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய கால்பந்துப் போட்டியின்போதும் வினியோகிக்கப்பட்டது.
மே 21ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியை, ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் தனதினிய குரலால் இறைமறை குர்ஆனின் சில வசனங்களை கிராஅத்தாக ஓதி, அதன் தமிழாக்கத்தையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இம்முகாமை நடத்தும் KCGC, KWAB அமைப்புகள் குறித்து, KCGCயின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் அறிமுகவுரையாற்றினார்.
அடுத்து, “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னென்ன வேலைவாய்ப்புகளைப் பெறலாம்? ப்ளஸ் 2 வில் 750 மதிப்பெண் பெற்றால் கூட நல்ல வேலைவாய்ப்புக்கான படிப்புகள் உள்ளனவா?” என்ற தலைப்புகளில் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றோர் உரை நிகழ்த்தினர்.
உரை: திரு.சத்தியமூர்த்தி...
துவக்கமாக, தொழில் நுட்பக்கல்வி இயக்குநரின் தனிச்செயலாளர் (ஓய்வு) சத்தியமூர்த்தி B.A. உரையாற்றினார்.
08ஆம் வகுப்பு முடித்திலிருந்து - உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் குறித்தும், குறைந்த மதிப்பெண் தகுதிகளுடன் உள்ளவர்கள் கூட தொழில்நுட்பக் கல்வி பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகள், அது தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றியும், பொறியியல், மருத்துவம், Space Science, Earth Science உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் பல்வேறு பொதுவான தகவல்களைப் பட்டியலிட்டு அவர் உரையாற்றினார்.
உரை: திரு.சுந்தரராஜூ...
அவரைத் தொடர்ந்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் எஜுகேஷன் முதல்வர் (ஓய்வு) சுந்தரராஜு M.Com., M.Phil., உரையாற்றினார்.
வணிகத்துறையில் உள்ள பல்வேறு படிப்புகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். நகைத் தொழில் சம்பந்தமான படிப்புகளில் பெண்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும், பெண்கள் மட்டுமே பயிலும் வகையில் என்னென்ன படிப்புகள் எங்கெங்கு உள்ளன என்பது குறித்தும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
உரை: திரு.ஜனஹரன்...
அடுத்து, சென்னை அரசு கல்லூரி மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனஹரன் B.Tech., உரையாற்றினார்.
மாணவ-மாணவியருக்கு படிப்பின் மீதான கவன ஈர்க்கும் வகையில், நகைச்சுவையோடும் - சிந்திக்க வைக்கும் விதத்திலும் உரை நிகழ்த்தினார். இடையிடையே மாணவர்களிடம் கேள்விகளும் கேட்டு உற்சாகப்படுத்தினார். நூறு தந்தை ஒரு தாய்க்குத்தான் சமம் என குடும்பத்தில் தாய் வகிக்கும் முக்கிய பங்குகளைப் பற்றிக் குறிப்பிட்டார். வெறும் பட்டத்திற்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே படிக்காமல் பண்புகளை வளர்க்கவும் அறிவை மேம்படுத்தவுமே படிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
உரை: ஜனாப் வி.எம்.எஸ்.சுலைமான்...
பின்னர், மாணவ-மாணவியருக்கு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. இடைவேளைக்குப் பின், KCGC -யின் கல்விக்குழு உறுப்பினர் வி.எம்.எஸ்.சுலைமான் உரையாற்றினார்.
கடலிலும் - கப்பலிலும் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்தும், அவை தொடர்பான படிப்புகள் குறித்தும் - தமது அனுபவத்துடன் கூடிய பல தகவல்களைக் கொண்டு அவர் உரை நிகழ்த்தினார்.
HARD WORK, SMART WORK, SMART THINKING ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் பற்றியும் சிந்திக்கும் விதத்தில் சிறப்பாக அவர் பேசினார்.
உரை: ஜனாப் அஷ்ரஃப்...
இறுதியாகப் பேசிய ETA MELCO நிறுவனத்தின் சீனியர் கன்சல்டன்ட் அஷ்ரஃப் B.E., M.B.A., M.Phil., உரையாற்றினார்.
காயல்பட்டினத்தைச் சார்ந்த - பல்வேறு உயர்ந்த வேலைகளில் பணியாற்றிக் கொண்டிருப்போர் பற்றி அவர் தனதுரையில் பட்டியலிட்டுப் பேசினார். படிப்பின் மூலம் நம் நாட்டிலேயே கிடைக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறிய அவர், படிக்காமல் அரபு நாடுகளுக்குச் சென்று பணிபுரிவோர் சந்திக்கும் பல்வேறு அவலங்கள் குறித்தும் தெளிவுபட விளக்கினார்.
“குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோமே...? நம்மால் இனி என்ன செய்ய முடியும்...?” என்றெல்லாம் நினைக்காமல், “எதையும் நம்மால் சாதிக்க முடியும்!” என்ற தன்னம்பிக்கைதான் ஒருவரது வாழ்க்கையின் உச்சியை அடையச் செய்யும் ஏணிப்படியாக அமையும் என்று அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதையடுத்து பதவியேற்பு விழாவில், தொடர்ந்து அவர் கூறிய “YES WE CAN” என்பதைப் போல “YES I CAN” என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும் என்று பேசினார்.
IPL கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய சுற்றுக்குத் தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்குப் போய் மீண்டும் தேர்வானதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு செயலில் கிடைக்கப் போகும் பலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல் அதில் பங்கேற்பது (PARTICIPATION) என்பதுதான் மிக முக்கியமானது எனக் கூறினார்.
நிகழ்ச்சி நடத்துவதற்கு உதவியளித்த சென்னை ஆலிம் முஹம்மத் சாலிஹ் கல்லூரி, திருச்சி எம்.ஏ.எம். கல்லூரி மற்றும் நமதூர் வாவு வஜீஹா கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்த தகவல்களை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் விளக்கிப் பேசினார்.
KCGC-யின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிஃபாய் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கேள்வி நேரம்:
தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவியரும், பெற்றோரும் பற்பல கேள்விகளைக் கேட்க, அதற்கான விளக்கங்கள் சிறப்பு விருந்தினர்களால் அளிக்கப்பட்டது.
மாணவ-மாணவியரின் ஆர்வத்தைக் கருத்திற்கொண்டு, கேள்வி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
கருத்து கேட்பு:
அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து வந்திருந்தவர்களிடம் கருத்து (FEED BACK) கோரப்பட்டது. ஆண் பெண் பகுதிகளிலிருந்து இம்முகாம் குறித்த கருத்துக்கள் பெறப்பட்டன.
நினைவுப் பரிசுகள்:
அடுத்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரராஜு,ஜனஹரன், அஷ்ரஃப் ஆகியோருக்கு முறையே ஸ்மார்ட் அப்துல் காதர் (KCGC), ஜமால் மாமா, அப்துல் ரஹீம் (KWAB), P.A.K. சுலைமான் (KCGC) ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சிகளை, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil., நெறிப்படுத்தினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர் - முகாம் நுழைவாயிலில் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
மாணவர்கள் 108 பேர், மாணவியர்கள் 67 பேர் மற்றும் அவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
காயல்பட்டினம்-சென்னை வழிகாட்டுக் குழு (KCGC), காயல் நலமன்றம் பெங்களூர் (KWAB) இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உள்ளூரிலிருந்து இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், KCGC -யின் உள்ளூர் பிரதிநிதி என்.எஸ்.இ.மஹ்மூது, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆபிதீன், அதன் ஆலோசகர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஹாஃபிழ் எம்.எம். முஜாஹித் அலீ, ரெட் ஸ்டார் சங்க செயலாளர் ஓ.ஏ.நஸீர் மற்றும் அதன் உறுப்பினர் கட்டா மரைக்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இவ்வாறு, KCGC சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |