காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் இடைநிறத்தப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், தென்மாவட்ட அளவில் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
பயணியர் வசதிக்காக, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நுழைவுச் சாலை, மின் விளக்குகள், தங்குமிடம், கழிப்பிடம், நடைமேடையை விரிவாக்கி உயர்த்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து தருமாறு, மத்திய தொடர்வண்டித் துறையின் அப்போதைய இணையமைச்சரும், மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறையின் தற்போதைய இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவருமான இ.அஹ்மத் ஸாஹிபிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த 29.12.2009 அன்று காயல்பட்டினம் வருகை தந்த அவர், தொடர்வண்டி நிலையத்தை நேரடியாகப் பார்வையிட்டார். பின்னர் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவிடப்படுவதாக மேடையிலேயே அறிவித்தார். அதன் பின்னர், இவ்வகைக்காக ரூ.70 லட்சம் நிதியொதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நுழைவுச் சாலை (approach road) அமைக்கப்பட்டது. மேற்கூரை அமைப்பதற்காக கம்பிச் சட்டங்கள் நிறுவப்பட்டன. சில இடங்களில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், செய்த பணிகள் எவற்றையும் முழுமையாக பூர்த்தி செய்யாமலும், செய்ய வேண்டிய பணிகள் எதையும் கையிலெடுக்காமலும் பல காலமாக காலந்தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும், நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென, அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 26.05.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஆடிட்டர் அப்துல்லாஹ், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நகர பொதுநல அமைப்பினர் பின்வருமாறு முழக்கங்களை முன்மொழிய, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அதனை வழிமொழிந்தனர்:-
பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிறைவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கண்டனப் பேருரையாற்றினார்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் ரூ.70 லட்சம் செலவில் செய்ய திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைந்து முடிக்காவிடில், தூத்துக்குடி - நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் லீக் கிளைகளை ஒருங்கிணைத்து, தென்மாவட்ட அளவிலான இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தனதுரையில் அறிவித்தார்.
நிறைவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, துஆவுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள், உறுப்பினர்களும், நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். |