காயல்பட்டினம் அருகில் கடலில் ஃபைபர் படகு கவிழ்ந்தது. மீனவ இளைஞர் பலியானார். அவரது தந்தையை மீனவர்கள் தேடி வருகின்றனர்.
காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை)யைச் சேர்ந்த எவரெஸ்ட் மகன் பனியடிமை (45). இவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் அவரது மகன்கள் அருளப்பன் (18), அபிஷேக் (13), இருதயம் மகன் தாசன் (65) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தைச் சேர்ந்த சூசை மகன் செபஸ்தியான் (64) ஆகிய ஐவரும் திங்கட்கிழமை அதிகாலை 02.30 மணி அளவில் கடையக்குடியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
கடலுக்குள் சுமார் 25 கி.மீ. தொலைவில் ஃபைபர் படகு மீது பெரிய அலை திடீரென மோதியதில் படகு கவிழ்ந்தது. இதில் பனியடிமை மற்றும் அவரது மகன் அருளப்பன் ஆகியோர் கடலுக்குள் வீழ்ந்தனர்.
படகு நிமிர்த்தப்பட்டு இஞ்சினை இயக்கி புறப்பட முயன்ற நேரத்தில், அருளப்பன் படகில் ஏற முயன்றபோது படகு கயிறில் சிக்கி கடலில் மூழ்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடலில் விழுந்த பனியடிமையையும் காணவில்லை.
இறந்த அருளப்பன் உடலுடன் மீனவர்கள் மாலை 04.00 மணிக்கு கரை திரும்பினர். அப்படகுடன் சென்ற மேலும் 5 படகுகளில் இருந்த சுமார் 20 மீனவர்கள் பனியடிமையை கடலில் தேடியும் பலனின்றி திரும்பிவிட்டனர்.
இதுதொடர்பாக ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடலோரக் காவல் படையினரும் இந்நிகழ்வு குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்நிகழ்வு தொடர்பாக மீன் வளத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. |