இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் - தங்கள் பள்ளிக்கூடங்கள் மூலமாக அரசு வேலைவாய்ப்பு இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 8,23,208 மாணவ மாணவியர் கலந்துக்கொண்டு தேர்வினை எழுதியுள்ளனர். இத்தேர்வில் 7,56,464 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெரும் நாளிலேயே அவர்களது கல்வித்தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக இணையதளம் வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.
வேலைவாய்ப்பகத்தில் தங்களின் கல்வித் தகுதியினை பயின்ற பள்ளிகள் பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்ப அட்டை மற்றும் சாதிச் சான்றிதழினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் (Identity Card) உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தற்பொழுது புதிதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவியர் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை (Priority) வேறு ஒரு வேலை நாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 30.05.2012 அன்று பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்படவுள்ளது. 30.05.2012 முதல் 13.06.2012 (15 நாட்களுக்குள்) அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ மாணவியர் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு +2 கல்வித் தகுதிக்கு 30.05.2012 தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதனையோட்டி ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்ப்பதற்காக பள்ளிகளின் வாயிலாக இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் +2 கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |