கோயமுத்தூர் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாஃபியிய்யா ஜமாஅத் சார்பில் சார்பில், நடப்பு கோடை விடுமுறையை முன்னிட்டு, மகளிருக்கான கோடைகால தீனிய்யாத் - மார்க்கப் பயிற்சி முகாம், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி முதல் மே மாதம் 19ஆம் தேதி வரை 20 நாட்கள் நடைபெற்றது.
இம்முகாமில், காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியை மவ்லவிய்யா கே.எம்.எல்.சதக்கு ஃபாத்திமா முஅஸ்கரிய்யா தலைமையில் 10 ஆசிரியையர் பங்கேற்று, மார்க்க அடிப்படைக் கல்வி மற்றும் நல்லொழுக்க பயிற்சி வகுப்புகளை நடத்தினர். இதில், கோயமுத்தூரைச் சார்ந்த 220 பெண்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
மே 20 ஞாயிற்றுக்கிழமையன்று பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவியரின் பல்சுவை மார்க்க நிகழ்ச்சிகள், சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் முதன்மைப் பேராசிரியை மவ்லவிய்யா அஃப்ஸலுல் உலமா எம்.ஐ.கதீஜத்துல் குப்றா முஅஸ்கரிய்யா, மவ்லவிய்யா நஹ்வீ முஹம்மத் ஆமினா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிறைவுப் பேருரையாற்றினார்.
இவ்விழாவில், கோயமுத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். |