காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - தொழில் செய்ய ஆர்வமுள்ள 23 பயனாளிகளுக்கு தொழிற்கருவிகள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினத்திலுள்ள - தொழில் செய்ய ஆர்வமுள்ள ஏழைப் பயனாளிகள், உதவி கோரி காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பில் சமர்ப்பிக்கும் மனுக்களை, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய அமைப்புகள் இணைந்து, பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பர். அவ்வறிக்கையின்படி இறுதி செய்யப்படும் பயனாளிகளுக்கு காயல்பட்டினத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், உதவி கோரி அண்மையில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தொழிற்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலகத்தில், 17.09.2012 திங்கட்கிழமை இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் முத்தவல்லி ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஹாஜி டி.எம்.ஆர்.மர்ஸூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் பொருளாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நகர்நலப் பணிகள் குறித்து, அவ்வமைப்பின் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் விளக்கிப் பேசினார்.
நடப்பு நிகழ்ச்சியில், வழங்கப்படும் தொழிற்கருவிகளுக்காக பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் துவக்கமாக ரூபாய் 50,000 தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர், பயனாளிகள் எண்ணிக்கையும் - தேவையும் அதிகரித்ததையடுத்து மீண்டும் நிதியொதுக்கீடு செய்து மொத்தம் ரூபாய் 1,15,000 தொகை மதிப்பீட்டில் தொழிற்கருவி பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர், ஏழைப் பயனாளிகளுக்கு தொழிற்கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. 12 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், 7 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் க்ரைண்டர் இயந்திரமும், 4 பயனாளிகளுக்கு அடுமனை அடுப்பும் (Baking Oven) வழங்கப்பட்டன.
துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், கே.எம்.டி.சுலைமான், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஓ.கியாது, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 22:00 / 18.09.2012] |