விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, இம்மாதம் 22ஆம் தேதியன்று, ஆறுமுகநேரியிலிருந்து காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு விநாயகர் ஊர்வலம் செல்லவுள்ளது.
இந்த ஊர்வலம் செல்வதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து இருதரப்பு கலந்தாலோசனைக் கூட்டம், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையில் 16.09.2012 அன்று நடைபெற்றது. காவல்துறை துணை ஆய்வாளர்கள் ஷ்யாம் சுந்தர், சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஜி.ராமசாமி, ஜி.முத்துராஜன், எம்.கசமுத்து, ஆர்.முத்துகுமார், எஸ்.மணிகண்டன், எஸ்.விஜய பாஸ்கர், சி.ராதாகிருஷ்ணன், எம்.ராஜா, கே.ஜெயசிங் ஆகியோரும், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சாளை முகம்மது அப்துல் காதர் என்ற சாளப்பா, எஸ்.ஐ.அலி அக்பர், ஓ.ஏ.சிராஜுத்தீன், மஹ்முது, ஹசனா லெப்பை, ஐ.பி.ஹூசைன், தேஜ் முஜிப், இரத்தினபுரி ஊர்தலைவர் வி.சுந்தா;, காயல்பட்டினம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஏ.எம்.அப்துல் கார், ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*** 22ஆம் தேதி சனிக்கிழமை ஆறுமுகநேரி பஜாரில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம், பிற்பகல் 04.30 மணிக்கு மேல் 06.00 மணிக்குள் காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவைக் கடந்து விடவேண்டும்...
*** ஊர்வலத்தில் மாற்று மதத்தையோ அல்லது மதத்தினரையோ கண்டித்து கோஷம் எழுப்பவோ, சைகை காட்டவோ கூடாது...
*** ஊர்வலம் வரும் நேரத்தில் காயல்பட்டினம் செய்கு ஹூஸைன் பள்ளியில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது...
*** ஐக்கிய விளையாட்டு சங்க திடலில் யாரையும் அனுமதிக்கக் கூடாது...
*** கூலக்கடை பஜார், பைபாஸ் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்...
*** ஆறுமுகநேரியில் இருந்து புறப்படும் ஊர்வலம் இரத்தினபுரியில் நின்று, காயல்பட்டினம் சிவன் கோவிலில் இருந்து வரும் விநாயகர் ஊர்வலத்துடன் இணைந்து செல்லவேண்டும்...
*** காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவு, விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, மன்னர் ராஜா கோவில் தெரு, பூந்தோட்டம், தைக்காபுரம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் செல்லவேண்டும்...
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |