சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், கடந்த 12.09.2012 புதன்கிழமை இரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமான ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 63ஆவது செயற்குழுக் கூட்டம், 14.09.2012 வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணியளவில், தம்மாம் நகரிலுள்ள சகோதரர் பாளையம் எம்.எஸ்.சதக்கத்துல்லாஹ் அவர்களின் இல்லத்தில், மன்றத்தின் தலைவர் டாக்டர் ஏ.எஸ்.இத்ரீஸ் மற்றும் பொதுச் செயலாளர் சகோதரர் அஹ்மத் ரஃபீக் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தை சகோதரர். ஓ.எஃப்.செய்யித் முஹம்மத் சாதுலி அவர்கள் கிராஅத் ஓதி, வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த கூட்டத்தில் முதலாவதாக, ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர், மரியாதைக்குரிய ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல மனிதரை இழந்து நிற்கும் காயல் மக்களுக்கும், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) அங்கத்தினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்து, அவர்களுக்காக அனைவரும் வல்ல இறைவனிடம் துஆ இறைஞ்சினார்கள்.
அடுத்து, மருத்துவம் மற்றும் கல்வி வகைக்கு வந்துள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, உதவிகள் வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
அடுத்து, மன்றத்தின் சார்பாக ஊரில் வழமையாக நடைபெறும் மருத்துவ முகாம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் தலைவர் அவர்களின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, அதில் இளம் பெண்களுக்கு மிக இன்றியமையாத ருபெல்லா (ஜெர்மன் தட்டம்மை) தடுப்பூசி போடுவது பற்றி முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இக்ராஃவின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பான "ஷிபா" பற்றியும் விவாதிக்கப்பட்டது.
வரும் 21.09.2012 - வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பின், சகோதரர் பாளையம்.எம்.எஸ்.சதக்கத்துல்லாஹ் அவர்களின் இல்லத்தில் வைத்து, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை S.I.ஜியாவுத்தீன்,
துணைத்தலைவர்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா. |