இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் ஏ.முஹம்மத் காலித் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உமர் ஸமான் வரவேற்றுப் பேசினார். மாவட்ட பேச்சாளர் காயல் அப்துர்ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அப்துல் காதிர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், பாலப்பா அப்துல் காதிர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து, அமெரிக்க அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய ஆர்ப்பாட்ட முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழங்கினர்.
நிகழ்வின் நிறைவில், மத்திய அரசுக்கு பின்வருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது:-
(1) இத்திரைப்படத்தைத் தடை செய்து, இணையதளத்திலிருந்தும் அகற்றிட அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்...
(2) முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மத் நபிகளைக் கொச்சைப்படுத்தும் வண்ணம் இத்திரைப்படத்தை தயாரித்த யூத பயங்கரவாதியை தூக்கிலிட, அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்...
(3) இத்திரைப்படத்தில் நடித்த 14 நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்...
(4) அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடனான தூதரக உறவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்...
(5) இந்தியாவிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் அனைத்தையும் மத்திய அரசு உடனடியாக இழுத்து மூட வேண்டும்...
இவ்வாறு மத்திய அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
S.உமர் ஸமான்,
மாவட்ட செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தூத்துக்குடி மாவட்டம். |