ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் 12.09.2012 புதன்கிழமை இரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமானார்.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில் அதன் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல இறைவனின் திருப்பெயரால்...
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிக பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே... (திருக்குர்ஆன்: அத்தியாயம் 4; வசனம் 78)
ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவரும், ஜெய்ப்பூர் வியாபார பிரமுகர்களால் “முஸ்தஃபா பாய்” என்று கண்ணியத்துடன் அழைக்கப்பட்டவருமான ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்கள் காலஞ்சென்ற செய்தி எம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.
அனைத்து தரப்பு சகோதரர்களுடனும் சம நிலையில் - அன்புடனும், வாஞ்சையுடனும் சகோதரத்துவத்தைப் பேணி வந்த பெருந்தகை இவர். தான் வர்த்தகம் செய்த ஜெய்ப்பூரிலே நமதூர் சகோதரர்கள் சந்தித்த எந்தப் பிரச்சினையானாலும், ஓடோடிச் சென்று - உதவிகள் புரிந்து - சரியான தீர்வையும் பெற்றுக்கொடுத்த மனித நேயப் பண்பாளரின் மறைவு, அவர்தம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், காயல் மாநகருக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் மட்டுமின்றி, ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தினர் அனைவருக்கும் எமது இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைக் கைக்கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.
மர்ஹூமவர்களின் அனைத்து பிழைகளையும் கிருபையுள்ள அல்லாஹ் மன்னித்தருளி, அவர்களின் நற்கிரியைகளை அங்கீகரித்து, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியை தங்குமிடமாக ஆக்கியருள வல்ல இறையோனை இறைஞ்சுகிறோம்.
“அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டபோதிலும், நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம்; நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம் என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன்: அத்தியாயம் - 2; வசனம் 156)
இவ்வாறு, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில், அதன் செயலர் ஹாஜி பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |