தமிழகத்தில் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நியைம் உள்ளதைப் போல நகர்ப்புறத்திலுள்ள ஏழை மக்களும் பயனடையும் நோக்குடன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தின் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் துவக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், காயல்பட்டினம் நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத்தின் சார்பில் இடம் வழங்கவும், அவர்களால் காண்பிக்கப்பட்ட தற்காலிக கட்டிடத்தில் தற்போது ஆரம்ப சுகாதர நிலையத்தைத் துவக்கவும் முடிவு செய்யப்பட்டு, தற்காலிக கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டமைப்புகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் துவக்க விழா, 15.09.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் கோமான் தெருவிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். துவக்கமாக விழா நிகழ்விடம் அருகில் மரக்கன்று நட்டு தண்ணீர் பாய்ச்சினார்.
பின்னர், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர், உள்ளே சென்ற அவர், அங்குள்ள பதிவேடுகள், மருந்துகள், நோயாளிகளுக்கான படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டார். துவக்கமாக அவருக்கு டாக்டர் ராணி டப்ஸ் மருத்துவ பரிசோதனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. கொங்கன் தலைமையில் விழா துவங்கியது. தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கோமான் ஜமாஅத் சார்பில் - விழா தலைவருக்கும், சிறப்பு விருந்தினருக்கும் காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் பூங்கொத்து வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
பின்னர், பணி நிமிர்த்தம் வெளியூர் சென்றுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சார்பாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
காயாமொழி மருத்துவ அலுவலர் டாக்டர் பி.சண்முகநாதன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், மாவட்ட சுகாதாரப் பணிகளின் அதிகாரிகள், அலுவலர்கள், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, தலைமை எழுத்தர் முருகேசன் உள்ளிட்டோரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தின் மேற்பார்வையில், கோமான் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். |