தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், கும்பகோணத்தில் நடத்தப்பட்ட கல்வி விழிப்புணர்வு மாநாட்டில், கல்வி - இட ஒதுக்கீடு குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம்மாநாட்டில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விபரம் பின்வருமாறு:-
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 08.09.2012 அன்று கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை கருத்தரங்கம் நடைபெற்றது.
அன்று மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை பேரணியும், அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் அல்அமீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் பரந்து விரிந்த மைதானத்தில் மாநாடும் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மனித வள மேம்பாடு - வெளியுறவுத்துறை மத்திய இணையமைச்சருமான இ.அஹ்மத், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அதன் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஷாஜஹான், நாடாளுமன்ற வேலூர் தொகுதி உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான், மகளிரணி மாநில அமைப்பாளர் பேராசிரியை தஸ் ரீஃப் ஜஹான், மாநில செலயாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார் உட்பட அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு, பல்வேறு தலைப்பபுகளில் உரையாற்றினர்.
இம்மாநாட்டில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். காயலர்கள் சிறப்புப் பேருந்தில் சென்று மாநாட்டில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. |