காயல்பட்டினம் நகர்மன்ற செயல்பாடுகள் பிரச்சனைகள் இன்றி தொடர சில உலக காயல் நல மன்றங்கள் சார்பாக முயற்சிகள் அண்மையில்
மேற்கொள்ளப்பட்டது. நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட பெருநாள் ஒன்றுகூடல்
நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் உடனும், நகர்மன்ற உறுப்பினர்கள் உடனும் - காயல் நல
மன்றங்கள் சார்பாக, அதன் பிரதிநிதிகள் உரையாடினர்.
சில காயல் நல மன்றங்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகள் குறித்து - சில தகவல்கள் நகரில் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து -
இந்த முயற்சியில் இறுதி வரை ஈடுப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சேக் சலீமிடம் -
காயல்பட்டணம்.காம் சில விளக்கங்கள் கேட்டிருந்தது. அதற்கு அவர் வழங்கிய பதில்கள் வருமாறு:
நகராட்சியில் சுமூக சூழல் நிலவ சில காயல் நல மன்றங்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து
...
காயல்பட்டினம் நகராட்சி கூட்டங்கள் நல்லபடியாக நடைபெறவேண்டும் என்ற அவாவோடு கடந்த சில வாரங்களாக உலக காயல் நல மன்ற
அங்கத்தினர்கள் சில முயற்சிகள் மேற்கொண்டோம். பெருநாள் ஒன்று கூடல், அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்றத் தலைவரிடம்
கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டவை இதில் அடங்கும். தீர்வுக்கான வழிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் பெறப்பட்ட ஆலோசனைகள்
பரிமாறிக்கொள்ளப்பட்டது.
துவக்கமாக நடந்த கலந்தாலோசனையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, கடந்த சில மாதங்களாக - தங்களுக்கும், தலைவிக்கும் இடையில்
நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து தெரிவித்தனர். பிரதானமாக மீடியா மற்றும் வீடியோ நகராட்சிக்கு வரவில்லை என்றால் கூட்டம்
சுமுகமாக நடைபெறும் என்றும் வழியுறுத்தினர்.
வீடியோ பதிவு செய்யக்கூடாது என்பதற்கு உறுப்பினர்கள் கூறிய காரணம்:
கூட்டத்தில் விவாதிக்கப்படும் சில விஷயங்கள் - வீடியோ பதிவு மூலம் வெளியில் வந்தால் பிரச்சனைகள் எழலாம்
வீடியோ பதிவு செய்யவேண்டும் என்பதற்கு நகர்மன்றத் தலைவர் கூறிய காரணம்:
வீடியோ பதிவை நான் முதலில் கேட்டதற்கு காரணம் வெளிப்படையான நிர்வாகம் அவசியம் என்பதற்காக. இருப்பினும் கடந்த சில மாதங்களாக
என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் (உறுப்பினரை நான் திட்டினேன் என்றும், நான் பெருவாரியான உறுப்பினர்கள் சம்மதிக்காத விஷயத்தை
தீர்மான புத்தகத்தில் எழுதினேன் என்றும்). வீடியோ பதிவு இருந்தால்தான் கூட்டத்தை நல்லப்படி நடத்த முடியும் என நினைக்க வைத்துள்ளது.
மேலும் ஊடகங்கள் - இல்லாததை எழுதுகிறது என்ற குற்றச்சாட்டு, வீடியோ பதிவு இருந்தால் இனி எழாது.
வீடியோ பதிவிற்கு உறுப்பினர்கள் சம்மதிக்கவில்லை. அதற்கு மாற்றாக உறுப்பினர்கள் வேறொரு தீர்வை முன்வைத்தனர். அதன்படி இரண்டு
கூட்டங்களுக்கு வீடியோ பதிவு வேண்டாம் என்றும், மீடியா உட்பட பொதுமக்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர்ந்து, கூட்ட நிகழ்வுகளை
தொலைக்காட்சி மூலம் அவதானிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும், இரண்டு கூட்டங்களுக்குப் பிறகு, வீடியோ பதிவின் தேவை குறித்து,
நகர்மன்றத் தலைவி - அதற்க்குண்டான நியாயமான காரணங்களை விளக்கி, கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தனர். உறுப்பினர்களின் இந்தக்
கருத்து நகர்மன்றத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.
மீடியா மற்றும் பொதுமக்கள் வெளியில் இருந்து, தொலைகாட்சி மூலம் கூட்டத்தை அவதானிக்கலாம் என்ற ஆலோசனையை ஏற்றுக்கொண்ட
தலைவர், வீடியோ பதிவை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கலாம் என்றும் சம்மதம் தெரிவித்தார். இருப்பினும், வீடியோ பதிவின்
அவசியத்திற்கான காரணங்களை விளக்கி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீடியோ பதிவு துவங்க வேண்டும் என்றும், அது குறித்து
எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த தகவலை, நான் உறுப்பினர்கள் சார்பாக என்னிடம் பேசிவந்த
உறுப்பினர்கள் சுகு மற்றும் ஜகாங்கீர் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
கூட்டம் நடைபெற்ற அன்று காலையில், நகர்மன்றத் தலைவியிடம் மீண்டும் பேசி, வீடியோ பதிவு விசயத்தில் விட்டுக்கொடுக்கும்படியும், மீண்டும்
பிரச்சனை வந்தால் - அப்போது நீங்கள் அதுகுறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் கூறினேன். சில காலங்களுக்கு (பிரச்சனைகள் எழாத வரை)
வீடியோ பதிவை ஒத்திவைக்க நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்தார். மேலும், இந்தக் கூட்டம் நல்லபடி நடைபெற, கூட்ட அரங்கிற்கு
வெளியே தொலைக்காட்சி ஏற்பாடு செய்து, வீடியோ பதிவு இல்லாமல், நேரடி ஒளிப்பதிவு செய்ய தான் உடனடியாக ஏற்பாடு செய்வதாக நகர்மன்றத்
தலைவர் கூறினார். இந்த தகவலை நான் உறுப்பினர் சுகு மற்றும் ஜகாங்கீர் ஆகியோரிடம் தெரிவித்தேன்.
உறுப்பினர் சுகு அவர்கள், வெளி ஊடகங்கள் அனைத்திற்கும் நாங்கள் தகவல் கொடுத்துவிட்டோம்; அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்;
காவல்துறைக்கும் தகவல் கொடுத்து விட்டோம்; இந்த ஒரு கூட்டம் மட்டும் அப்படியே நடக்கட்டும்; அடுத்த கூட்டதை சில தினங்களில்
பிரச்சனையின்றி நடத்தலாம்! என்று கூறினார். இதே கருத்தை உறுப்பினர் ஜகாங்கீரும் கூறினார்.
நகர்மன்றத் தலைவி அலைக்கழிக்க வைத்ததாக கூறப்படுவது குறித்து ...
நாங்கள் மேற்கொண்டது இரு தரப்புக்கும் இடையில் ஒரு சமரச முயற்சி. அவர்கள் கூறும் கருத்தை இவர்களிடமும், இவர்கள் கூறும் கருத்தை
அவர்களிடமும் தெரிவித்தோம். நாம் கூறிய ஒன்றை, ஒருவர் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறு. இதில் யாரும்,
யாரையும் அலைக்கழித்ததாக கூறுவது சரியல்ல.
சமாதானத்தில் ஈடுப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து ...
எல்லா முயற்சிகளும் எடுத்தும், உறுப்பினர்கள் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்த பிறகும்,
உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் தான் எனக்கு மன உளைச்சலைத் தந்தது.
தீர்வு காண வழி குறித்து ...
நகர்மன்றத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது - நீங்கள் யாரையும் மத்திஸ்தம் செய்ய எதிர்பார்க்காதீர்கள்.
நீங்களே ஒன்றாக அமர்ந்து, நடந்தவற்றைப் பற்றி பேசாமல், நடக்க வேண்டியவை குறித்து பேசி, சுமுக சூழலை உருவாக்குவதே சிறந்த வழி என
நான் கருதுகிறேன். இந்த கருத்தையே நான் நகர்மன்றத் தலைவியிடம் இறுதியாக தெரிவித்துவிட்டு வந்தேன். அவர்களும் அதனை முழுவதுமாக
ஏற்றுக்கொண்டுள்ளார்கள். Now the ball is in members court. எல்லாம் வல்ல அல்லாஹ், நம் நகராட்சியில் சுமுக சூழலை உருவாக்கி, நமது
நகராட்சி, பிற நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ அருள் புரிவானாக. ஆமீன்.
|