பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களிடையே புதைந்திருக்கும் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் நோக்குடனும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், யுனைட்டெட் சூப்பர் கோப்பை கால்பந்து சுற்றுப் போட்டி இவ்வாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், காலரி பேர்ட்ஸ், ஜி-கூல், ஹார்டி பாய்ஸ், கே-11, கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ், சில்வர் மைனர்ஸ், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ், உட்லண்ட்ஸ் ஆகிய எட்டு அணிகள் விளையாடின.
09.09.2012 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹார்டி பாய்ஸ் அணியும், கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ் அணியும் மோதின. கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ் அணியின் எஸ்.பி.சுலைமான், பி.எஸ்.அபூபக்கர் ஆகிய வீரர்கள் தமதணிக்காக தலா ஒரு கோல் அடித்தனர். ஹார்டி பாய்ஸ் அணியின் வீரர் ஜியாவுத்தீன் தனதணிக்கான ஒரு கோலை அடித்தார். ஆட்டத்தின் நிறைவில், 2-1 என்ற கோல் கணக்கில் கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ் அணி வெற்றிபெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் - இஸ்மாஈல், ஜமால், இஸ்மாஈல் ஃபஹத், இஸ்மாஈல் புகாரீ ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
ஆட்டத்தின் இடைவேளையின்போது, சிறப்பு விருந்தினர்களான - காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஹபீப், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ஆகியோருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இரவு 07.00 மணிக்குத் துவங்கிய பரிசளிப்பு விழாவிற்கு, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார். ஹாஃபிழ் மூஸல் காழிம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை நெறிப்படுத்திய பல்லாக் அப்துல் காதிர் நெய்னா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், மேடையில் முன்னிலை வகித்தோர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், இச்சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசு, ஹார்டி பாய்ஸ் அணியின் ஜியாவுத்தீன் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது.
அடுத்து, இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஈரணி வீரர்களுக்கும் கால்பந்து விளையாடுவதற்கான பூட் - காலணி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதுபோல, இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளிலிருந்தும் சிறந்த ஒரு வீரருக்கு தலா ஒரு பூட் - காலணி பரிசாக வழங்கப்பட்டது.
அடுத்து, இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் அனைத்து வீரர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வெற்றிக்கு முனைந்த ஹார்டி பாய்ஸ் அணிக்கு ரூபாய் 5,000 - கோப்பை - சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ் அணிக்கு ரூபாய் 8,000 - கோப்பை - சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர், அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற இரண்டு அணிகளுக்கும் தலா ரூபாய் 3,000 பணப்பரிசு வழங்கப்பட்டது.
ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் பீர் முஹம்மத், அதன் பொருளாளர் ஹாரூன், ஹாஜி இல்யாஸ், கால்பந்து விளையாட்டு அனுசரணையாளர் மாஷா அல்லாஹ் தாவூத், கே.வி.ஹபீப், எல்.கே.லெப்பைத்தம்பி, மஹ்மூத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
சுற்றுப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினரான பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஹாரூன், சதக், ஹிதாயா ஹமீத், கலாமீ யாஸர் அரஃபாத், ஹபீபுர்ரஹ்மான் மற்றும் விளையாட்டு வீரர்களான ஜமால், ரியாஸ், கரீம், சதக், ஜாபிர், கிழுறு முஹம்மத், புகாரீ, முஹம்மத் அப்துல் காதிர் (பாலப்பா), சேக், காதர் ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ |