தமிழகத்தில் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நியைம் உள்ளதைப் போல நகர்ப்புறத்திலுள்ள ஏழை மக்களும் பயனடையும் நோக்குடன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தின் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் துவக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், காயல்பட்டினம் நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத்தின் சார்பில் இடம் வழங்கவும், அவர்களால் காண்பிக்கப்பட்ட தற்காலிக கட்டிடத்தில் தற்போது ஆரம்ப சுகாதர நிலையத்தைத் துவக்கவும் முடிவு செய்யப்பட்டு, தற்காலிக கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டமைப்புகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் துவக்க விழா, 15.09.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் கோமான் தெருவிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வெளியூரிலிருந்த காரணத்தால் இவ்விழாவில் கலந்துகொள்ள இயலாமற்போன காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், விழாவில் வாசிப்பதற்காக, கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத்திற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:-
மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் ஜமாஅத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
முக்கியம், நமது காயல் மாநகரில், ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழா நிகழ்ச்சியில் - சொந்த வேலை காரணமாக சென்னை வந்துள்ள என்னால் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கீழ்க்காணும் வாழ்த்துரையை என் சார்பாக நிகழ்ச்சியில் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:-
இன்று நம் காயல் மாநகரில் ஆரம்ப சுகாதார நிலைய துவக்கம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிலையம் அமைவதற்கு தற்காலிக கட்டிடமும், நிரந்தர கட்டிடம் அமைப்பதற்குரிய இடமும் வழங்கிய கோமான் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்தை முதலாவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜமாஅத்து இணைந்து செய்துள்ள இந்த “ஸதக்கத்துன் ஜாரியா” என்ற நன்கொடையின் மூலம் இறைவனின் அளவில்லா அருட்கொடையை நீங்களனைவரும் நிரந்தரமாகப் பெற்றுக்கொண்டீர்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
ஆரம்ப சுகாதார நிலையத்தை காயல்பட்டினத்திற்கு வழங்கி ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கும், அதற்கு உறுதுணை புரிந்த அமைச்சர் பெருந்தகைகளுக்கும், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையமானது காயல்பட்டினத்தில் அமையவிருக்கும் அரசு செய்தியை அறிந்தவுடன், இந்த நிலையம் தனது பகுதியில் அமைந்து, ஊரிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென ஆர்வமும் - அக்கறையும் கொண்டு உழைத்த நமது நகராட்சியின் முதலாவது வார்டு உறுப்பினர் எனது பாசத்திற்குரிய ஜனாப் லுக்மான் காக்கா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோமான் ஜமாஅத்தினரால் வழங்கப்பட்டுள்ள நிலத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிரந்தர கட்டிடம் விரைவில் உருவாகி, திறப்பு விழா கண்டு, நமதூர் மக்களுக்கு நன்மைகள் பல அளிக்க வேண்டுமென்று வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். நன்றி. வஸ்ஸலாம்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், கோமான் ஜமாஅத்திற்கு அனுப்பியுள்ள தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |