உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஜகாத் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் நடை பெற்றது. இது குறித்து இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, I.T.I. போன்ற படிப்புகளுக்கு வருடந்தோறும் 55 முதல் 60 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடம் அனுசரணை பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்ராஃவுக்கு ஜகாத் நிதி தனியாக சேகரிக்கப்பட்டு அதற்கு தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது.அது போன்று இவ்வருடம் (2012-13) இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் 01.30 மணி வரை, காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த 06-06-2012 அன்று நடைபெற்ற இக்ராஃவின் செயற்குழு கூட்டத்தில் ஜகாத் நிதிக்கு நேர்காணல் செய்திட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர்களில், இக்ராஃவின் முன்னாள் துணைத்தலைவர்களும், மூத்த செயற்குழு உறுப்பினர்களுமான ஹாஜி எஸ்.ஹெச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோரும் இந்நேர்காணல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
31 மாணவர்கள், 8 மாணவியர் உட்பட மொத்தம் 39 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு,மறு தினமே அவர்களுக்கு - இக்ராஃவின் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான ரூ.4,36,400 தொகை முழுவதும் கல்வி உதவித்தொகையாக வழங்கி முடிக்கப்பட்டது.
திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவர்கள், பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம் - பிலால்களின் மக்களுக்கு இந்நேர்காணலில் முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்(மெரிட்) பெற்றிருந்த மாணவ-மாணவியருக்கு மற்ற மாணவர்களை விட கூடுதலாக உதவித்தொகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் பெரும்பாலும் பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக உதவித்தொகை கோரியிருந்தனர். மாணவியர் - பி.எட்., எம்.காம்.,நர்ஸிங், மழலையர் ஆசிரியர் பயிற்சி, உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.
எப்படியேனும் தங்கள் மக்கள் படித்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன்- வட்டிக்குக் கடன் பெற்றிருந்த சில மாணவர்களின் பெற்றோருக்கு, நேர்காணல் செய்த இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் அவர்கள், ஆலோசனைகளையும் -அறிவுரைகளையும் வழங்கியதுடன், நிர்ப்பந்தம் காரணமாக அவர்கள் பெற்ற வட்டிக்கடனை திரும்பச் செலுத்திட, பைத்துல்மால் மூலம் ஆவன செய்ய முயற்சி மேற்கொள்வதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இக்ராஃ ஜகாத் நிதியைப் பொறுத்தவரை முந்தய வருடம் (2010-11) ரூபாய் 48,800/- கிடைக்கப் பெற்று 5 மாணவ -மாணவியருக்கும், சென்ற வருடம் (2011-12) ரூபாய் 91,000/- கிடைக்கப்பெற்று 10 மாணவ-மாணவியருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் அதை விட பல மடங்கு அதிகமாக ஜகாத் நிதி (ரூபாய் 4,36,400/-) கிடைக்கப்பெற்று ஏராளமான (39) ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கபட்டுள்ளது. இக்ராஃவின் முறையான கல்விப்பணிகளை நேரில் கண்டும், கேள்விப்பட்டும் ஏராளமான கல்வி ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும் தாங்களாகவே முன்வந்து கல்விக்காக ஜகாத் நிதி வழங்கி வருவது குறித்து இக்ராஃ நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியையும், நிதி வழங்கிய சகோதரர்களுக்கு மிகுந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இன்ஷா அல்லாஹ்! இனி வரும் வருடங்களில் இதை விட அதிகமாக ஜகாத் நிதி கிடைக்கப் பெற்று, அதனை முறையாக ஏழை- எளிய மாணவர்களுக்கு வழங்கி அதன்மூலம் அவர்கள்தம் வாழ்வை பிரகாசம் பெறச் செய்வோமாக!அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டுமாக!ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர், இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |