காயல்பட்டினம் வழியாக 22.09.2012 - சனிக்கிழமை மாலை 75 விநாயகர் சிலைகள் ஊர்வலம் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் எம்ராஜா ஆகியோர் முன்னிலையில் ஆன்மிகவாதி த.ஐ. சிவராஜா பேரணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அய்யப்பன், பக்த ஜன சபை செயலாளர் பி.கே.எஸ்.கந்தையா, வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவர் த.தாமோதரன்,நகர் நல மன்ற தலைவர் பூபால்ராஜன் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தி.செந்தமிழ் செல்வன் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சி.முருகேசன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
22.09.2012 அன்று மாலை 04.15 மணிக்கு ஆறுமுகனேரி மெயின் பஜாரில் துவங்கிய 75 விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஜெயின் நகர், பேயன்விளை, அழகாபுரி, வழியாக காயல்பட்டினம் - இரத்தினபுரியை வந்தடைந்தது.
அங்கு காயல்பட்டினம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு புறப்பட்ட விநாயகர் சிலைகளுடன் இணைந்து காயல்பட்டினம் மகாத்மா காந்தி நினைவு வளைவிற்கு 06.00 மணிக்கு வருகை தந்தது.
விசாலாட்சியம்மன் கோயில் தெரு, மன்னராஜா கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக மாலை 06.30 மணியளவில் காயல்பட்டினத்தைக் கடந்து சென்ற ஊர்வலம் திருச்செந்தூரை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன், குற்ற ஆவணக் கூட துணை கண்காணிப்பாளர் தங்க துரை, ஆறுமுகனேரி ஆய்வாளர் டி.பார்த்திபன் உட்பட 10 ஆய்வாளர்கள், ஷியாம் சுந்தர், சண்முகவேல் உள்பட 30 உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பத்தப்பட்டிருந்தனர். |