காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தென்னக ரயில்வே மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் அஜித் குமாரை - மதுரையில் செப்டம்பர் 17 அன்று சந்தித்து - காயல்பட்டினம் ரயில்வே நிலையம் சம்பந்தமாக கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர். அது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
நமதூர் இரயில்வே நிலைய அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி 17.9.2012 அன்று நமது ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் அவர்கள் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் முத்து ஹாஜி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஹாஜி எஸ்.எம். ஹசன் மரைக்கார், ஹாஜி பிரபு தம்பி ஆகியோர் மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் திரு அஜித் குமார் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
திரு. அஜித் குமார் அவர்கள் மலையாளி. தமிழ் படிக்கத் தெரியாததால் மனுவில் குறிப்பிட்டிருந்த கோரிக்கைகளை அரைமணிநேரம் அவசரப்படாமல், அமைதியாக, கோரிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கேட்டறிந்து, ஐக்கியப் பேரவையால் கொடுக்கப்பட்ட ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்றுக்கொண்டு, அவைகளை நிவர்த்தி செய்து தருவதற்கு உத்தரவு பிறப்பித்தார், குறிப்பிட்ட பணிகளை, செய்யவேண்டிய அதிகாரிகளை, தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு விரைவாக செய்து முடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
திரு அஜித் குமார் அவர்களின் கடமையுணர்வு சென்றிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவர்களது கடமையுணர்வை பாராட்டி, அவர்தம் பணிசிறக்க வாழ்த்தி விடைபெற்றனர்.
விரைவாக தீர்கப்படவிருக்கும் குறைபாடுகள்:
மின்விளக்கு வசதி, குடிநீர் பாதுகாப்பு, நிலைய நிரந்தர பணியாளர் நியமனம் மற்றும் நடைமேடை நீளத்தை, உயரத்தை கூட்டுதல், தற்போதுள்ள நடைமேடை ஒன்பது இரயில்பெட்டிகள் நிறுத்தப்படும் அளவுக்கே நீளம் உள்ளது. மேலும் ஒன்பது பெட்டிகள் நிறுத்தப்படும் அளவுக்கு நடைமேடையின் நீளம் கூட்டப் பட உள்ளது.நடைமேடையின் உயரத்தை இரயில்வே துறை மூன்று பிரிவுகளாக முறைபடுத்தி வைத்திரிக்கிறது. தாழ்நிலை, நடுநிலை, உயர்நிலை. மேலும் ஒன்பது பெட்டிகள் நிறுத்தப்படும் அளவுக்கு கூட்டப்படும் நடைமேடையின் உயரம், நடுநிலை அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது. தற்போதுள்ள நடை மேடையின் உயரமும் மிக விரைவில் உயர்த்தப்படும் என்ற உத்தரவாதத்தையும் கூடுதல் கோட்ட மேலாளர்
திரு அஜித்குமார் அவர்கள் தந்துள்ளார்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|