தமிழக அரசின் நிதியுதவியுடன் 2 கோடியே ஏழு லட்சம் ரூபாய் செலவில் காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்திட, நேற்று நடைபெற்ற காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் பின்வருமாறு:-
தமிழக அரசின் - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2012-2013இன் கீழ் ரூபாய் 1 கோடியே 95 லட்சம் தொகையும், நகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் தொகையும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் செலவு மதிப்பீட்டில், காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்வதற்கான நிர்வாக அனுமதி, சென்னையிலுள்ள நகராட்சிகள் நிர்வாக ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது:-
இதுகுறித்து தீர்மானமியற்றுவதற்கான அவசரக் கூட்டம், 05.10.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது. 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தவிர அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருளை, காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் வாசித்தார்.
பின்வரும் 3 அம்சங்களைக் கொண்ட கூட்டப் பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது:-
பொருள் எண் 1:
இதுகுறித்து கருத்து தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், தொகைகள் குறித்து கூட்டப்பொருளில் வெறுமனே எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், “தொகைகள் லட்சத்தில்” என்று தலைப்பில் சேர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதுபோல, 3ஆவது அம்சத்தில், “அவன் செயல் காலனி” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், நகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத எந்தப் பெயர்களும் கூட்டப் பொருளில் இடம்பெறக் கூடாது எனவும், அவ்வாறு செய்வது முறைகேடுகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தெருவிளக்குப் பணிகள் என்ற தலைப்பின் கீழ் “எல்.இ.டி. தெருவிளக்குகள் (பிலிப்ஸ்)” என்று ஒரு நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது யார் எடுத்த முடிவு என்று கேள்வியெழுப்பினார். பெறப்பட்ட அறிவிப்பின்படியே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலர் செந்தில் தெரிவித்தார்.
சாலைப்பணிகள் என்ற தலைப்பின் 6ஆவது அம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆஸாத் தெரு தார் சாலை குறித்து கருத்து தெரிவித்த - அப்பகுதியை உள்ளடக்கிய 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், இருக்கும் பழைய சாலையை முற்றிலுமாக தோண்டி அகற்றிய பின்னரே புதிய சாலை போடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அதுகுறித்து பேசிய நகர்மன்றத் தலைவர், அவ்வாறு செய்வதுதான் முறை என்றும், சாலைப் பணிகள் நடைபெறும்போது அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனத்துடன் செயலாற்றிடுமாறு கேட்டுக்கொண்டார்.
வாறுகால் பணிகள் என்ற தலைப்பின் கீழான முதல் அம்சத்தில் புதிய பேருந்து நிலையம் முதல் மேல நெசவுத் தெரு வரை மழை நீர் வாறுகால் அமைத்தல் என்றுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அங்கு ஏற்கனவே வாறுகால் உள்ள நிலையில் அதைப் பழுது நீக்குவதை விட்டுவிட்டு, புதிதாக அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கலாமா என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு மற்றும் 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் ஆகியோர், அங்குள்ள பழுதுகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு நாட்பட்டவை என்றும், அப்பகுதியில் கடை வைத்திருப்போர் ஆங்காங்கே கற்களைக் கொண்டு அடைத்துவிட்டதால் அந்த வாறுகால் பெரும்பாலும் அழிந்துவிட்டதாகவும், புதிய வாறுகால் அமைப்பதைத் தவிர வேறெதுவும் அங்கு சாத்தியமற்றது என்றும் தெரிவித்தனர்.
இவ்வாறாக கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்ற பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துறுப்பினர்களும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்ததையடுத்து, இப்பொருள் படி பணிகளை நிறைவேற்ற தீர்மானமியற்றப்பட்டது.
பொருள் எண் 2:
நகராட்சியால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பின்மையால் பாதுகாப்பற்ற நிலையிலும், ஒழுக்கக் கேடுகள் நடைபெறும் இடமாகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறிவிட்டதாகவும், புதிதாக கட்டப்படும் கழிப்பறைகளையாவது முறைப்படி பராமரிக்க வேண்டும் என்றும் 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் கேட்டுக்கொண்டார்.
பொது கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்படும் முறை குறித்து 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வி எழுப்ப, நகராட்சி உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் அதுகுறித்து விளக்கமளித்தார்.
இவ்வாறாக கருத்துக்கள் பரிமாறப்பட்ட பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துறுப்பினர்களும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்ததையடுத்து, இப்பொருள் படி பணிகளை நிறைவேற்ற தீர்மானமியற்றப்பட்டது.
பொருள் எண் 3:
கடந்தாண்டு மழை நீர் வெள்ள நிவாரணப் பணிகளின்போது ஒரு மணி நேரத்திற்கு 600 ரூபாய் என்ற கணக்குப் படி ஆயில் எஞ்சின் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பல நாட்களில் பல மணி நேரங்கள் எஞ்சின் பயன்படுத்தப்படாமலே இருந்தும் அதற்கான வாடகைத் தொகையைக் கொடுக்க வேண்டியதேற்பட்டதாகவும் தெரிவித்த 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அடிக்கடி தேவைப்படும் இதுபோன்ற கருவிகளை வாடகைக்கு எடுப்பதைத் தவிர்த்து, நகராட்சி நிதியிலிருந்து சொந்தமாக வாங்க முயற்சிக்கலாமே என்று கேள்வியெழுப்பினார்.
நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அக்கருத்தை வரவேற்றனர். அதனடிப்படையில் புதிதாக ஆயில் எஞ்சின் வாங்கலாம் எனவும், ஒருவேளை அதற்கான நடைமுறைப் பணிகள் தாமதமாகி, அதற்குள் மழைப் பருவம் வந்துவிட்டால் அவசரத்துக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாமே என்றும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கருத்து தெரிவித்தார்.
இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துறுப்பினர்களும் கையுயர்த்தி, ஆதரவு தெரிவித்ததையடுத்து, இப்பொருள் படி பணிகளை நிறைவேற்ற தீர்மானமியற்றப்பட்டது.
கூட்டத் துளிகள்...
(1) இணையதள செய்தியாளர்களை வெளியேறுமாறு கூறிய ஆணையர்...
கூட்டம் துவங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரமான 04.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் - நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் - இணையதள நிருபர்களை அனுமதிக்கக் கூடாது என நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (RDMA) தெரிவித்திருப்பதாகக் கூறி, கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த காயல்பட்டணம்.காம் இணையதள நிருபர் உட்பட இரண்டு இணையதள செய்தியாளர்களையும் நகராட்சி கூட்டரங்கிலிருந்து வெளியேறுமாறு கூறினார்.
கூட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்ய முறைப்படி கடிதம் வழங்கி, கடந்த நவம்பர் மாதம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், இணையதள செய்தியாளர்களை தடை செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கடிதம் கடந்த ஜூலை மாதம் 09ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருப்பதாகவும், அக்கடிதத்திற்கு இரு வாரங்களில் பதில் கூற மாவட்ட ஆட்சியரகம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை எழுத்துப்பூர்வ பதில் - நகராட்சியால் வழங்கப்படவில்லை என்பதனையும் - காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் ஆணையரிடம் தெரிவித்தார்.
முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து இணையதள செய்தியாளர்கள் - கூட்ட அரங்கிற்கு வரக்கூடாது என எழுத்துப்பூர்வமாக தரும்படி காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் கேட்டார். எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் வழங்கப்படாததால், இணையதள செய்தியாளர்கள் - கூட்ட அரங்கில் வழமை போல் அமர்ந்து செய்தி சேகரித்தனர்.
(2) கூட்டம் துவங்க தாமதம்...
கூட்டம் துவங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரமான மாலை 04.00 மணியிலிருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர் அரங்கில் 8 உறுப்பினர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். எஞ்சிய 9 உறுப்பினர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். இணையதள செய்தியாளர்கள் வெளியே சென்றால்தான் அவர்கள் உள்ளே வருவதாக கூறுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920இன் படி, மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் 6 உறுப்பினர்கள் இருந்தால் கூட்டத்தை நடத்தலாம் என்றும், 8 உறுப்பினர்கள் அரங்கில் இருப்பதால் கூட்டத்தை உடனடியாகத் துவக்கலாம் என்றும், ஐந்து மணி வரை உறுப்பினர்கள் வருகையை எதிர்பார்க்கலாம் என்றும், அதற்குள் எஞ்சிய உறுப்பினர்கள் வரவில்லை என்றால் அரங்கினுள் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு கூட்டம் சட்டப்படி நடத்தலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்
(3) வருகைப் பதிவேட்டை வெளியே கொண்டு வர கோரிக்கை...
கூட்ட அரங்கிற்கு வெளியே இருந்த உறுப்பினர்கள், வருகைப் பதிவேட்டில் வெளியிலிருந்து கையெழுத்திட்டு, தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவதாக, அலுவலர்கள் கூறினர். கூட்ட அரங்கிற்குள் வந்து கையெழுத்திட்டு, கூட்ட பொருட்களுக்கு ஆதரவோ / எதிர்ப்போ தெரிவித்தால்தான் அதனை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய முடியும் என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாலை 05.00 மணியளவில் எஞ்சிய உறுப்பினர்களும் கூட்ட அரங்கிற்குள் வரவே கூட்டம் துவங்கியது.
(4) உறுப்பினர் இ.எம்.சாமி கேள்வி...
கூட்டம் துவங்கிய சில மணித்துளிகளில் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, நகர்மன்றக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்ளலாம் என சில தினங்களுக்கு முன்னர் நகராட்சிக்கு வந்திருந்த RDMA கூறியது என்ன என வினவ, RDMA பல விஷயங்கள் பேசியதாகவும், எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் அனைத்து உத்தரவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அப்போது அவரிடம் தான் தெரிவித்ததாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
(5) ஒவ்வொரு கூட்டப்பொருள் நிறைவிலும் உறுப்பினர் ஆதரவு / எதிர்ப்பைப் பெறல்...
நகர்மன்றக் கூட்டத்தில் ஒவ்வொரு கூட்டப் பொருளும் வாசிக்கப்பட்ட பின்னர், ஆதரவு - எதிர்ப்பு என்பதை உறுப்பினர்களை கை உயர்த்தச் சொல்லி முடிவு செய்யுமாறு 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கருத்து தெரிவித்தார்.
அதனை வரவேற்றுப் பேசிய நகர்மன்றத் தலைவர், இக்கூட்டத்திலும், இனி வருங்காலங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் இம்முறையையே பின்பற்றலாம் என்றும் தெரிவித்தார். அதனடிப்படையில், நடப்பு கூட்டத்தின் 3 கூட்டப் பொருட்களும் வாசிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், உறுப்பினர்களை கை உயர்த்துமாறு நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொள்ள, 3 கூட்டப் பொருட்களுக்கும் அனைத்து உறுப்பினர்களும் கையுயர்த்தி ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். அதனையடுத்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
(6) புகைப்படங்கள்...
கூட்டம் துவங்கியவுடன், புகைப்படம் எடுக்கும் செய்தியாளர்கள், அவர்கள் பகுதியில் இருந்தே படமெடுக்கும்படி நகர்மன்றத் தலைவர் கூறினார். மேலும், கூட்டத்தில் பார்வையாளர்களாக வந்திருந்தோர் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
(7) கருப்புச் சட்டை...
திராவிட முன்னேற்றக் கழக மாநிலத் தலைமையின் அறிவுறுத்தல் படி, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் ஆண் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண் உறுப்பினர் ஒருவர் கருப்பு மேலாடை அணிந்தும் நகர்மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. இக்கூட்டத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை தலைவர் ‘ஹிதாயா’ அப்துர்ரஹ்மான், தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ.செய்யித் ஹஸன், காயல்பட்டினம் தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ (48) உட்பட சுமார் 20 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
|