ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், “நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், “நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த முறை விருத்தாச்சலம் நகர்மன்றத்தில் நேர்மையான நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு, தவறுகளை தானும் செய்யாமல் - பிறரையும் செய்ய விடாமல் 5 ஆண்டு பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்த கண் மருத்துவ பேராசிரியர் வள்ளுவன் அவர்களும், அவருக்கு உறுதுணையாக இருந்து நகர்மன்ற நிர்வாகத்தை சீரிய பாதையில் செயல்படுத்திட உறுதுணை புரிந்த விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மாப்பிள்ளை முஹ்யித்தீன் அவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, ஒரு நகராட்சியிலுள்ள தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உரிமைகள், தகுதிகள், கடமைகள் குறித்தும், பத்திரப்பதிவு அலுவலகம், தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிட்ட அரசு - அரசு சாரா இயந்திரங்கள் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும், அவற்றில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய முறைகள் குறித்தும், நடைபெறும் முறைகேடுகளைக் களைவதற்கான நடைமுறைகள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நன்மைகள், அதனைப் பயன்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கிப் பேசவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இவை குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கும் டாக்டர் வள்ளுவன் பதிலளிக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரின் அனைத்துப் பொதுமக்களும் அவசியம் பங்கேற்று, நல்ல பல கருத்துக்களைக் கேட்டறிந்து பயனடைய வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
முன்னதாக, 07.10.2012 அன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் உறுப்பினர்கள் மற்றும் நகரின் பொதுநல அமைப்பினர் பங்கேற்கும் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்பதையும் அறியத் தருகிறோம். நன்றி.
இவ்வாறு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செயலாளர் கே.எம்.டி.சுலைமான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |