சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், கடந்த 30.09.2012 ஞாயிற்றுக்கிழமையன்று, சிங்கப்பூரிலுள்ள FAIRY POINT SEA VIEW CHALET 3இல் நடைபெற்றது.
பேருந்தில் புறப்பாடு:
உறுப்பினர்களை பேருந்தில் கூட்ட நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இடங்களில் உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் திரண்டிருந்தனர். மதியம் 03.30 மணியளவில் அவர்கள் கூட்ட நிகழ்விடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இடி-மழைக்கிடையில் இன்ப அரட்டை:
அங்கு சென்றதும் இதமான வானிலை அனைவரையும் ஆரத்தழுவி வரவேற்றது. சில மணித்துளிகளில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அனைவரும் சில மணித்துளிகளை உள்ளரங்கிலேயே கழித்தனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் முகமன் கூறி வரவேற்றவர்களாக - ஊர் நடப்புகள் குறித்த அரட்டையில் மூழ்கினர். மழையை ரசித்தவாறே அரட்டையடித்தது சிங்கப்பூரில் ஓர் இன்ப நிகழ்வாகவே இருந்தது.
உணவேற்பாடு:
நிகழ்விடத்திற்கு முன்னதாகவே வந்திருந்த சமையல் ஏற்பாட்டுக் குழு, குறித்த நேரத்தில் சமையற்பணிகளை செவ்வனே செய்துகொண்டிருந்தது. துவக்கமாக - காயல்பட்டினத்தின் பாரம்பரிய இஞ்சி கலந்த தேனீர் - வடை சிற்றுண்டி ஆயத்தம் செய்யப்பட்டது.
அஸ்ர் தொழுகை:
அஸ்ர் தொழுகைக்கான நேரம் வந்ததையடுத்து, அதான் ஒலிக்கப்பட்டு, ஜமாஅத்தாக தொழுகை நிறைவேற்றப்பட்டது. இத்தொழுகையை, ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஹம்மத் இஸ்மாஈல் வழிநடத்தினார்.
தேனீர் - சிற்றுண்டி வரவேற்பு:
தொழுகை நிறைவுற்ற பின்னர், உறுப்பினர்கள் அனைவருக்கும் இஞ்சி தேனீரும், வடையும் பரிமாறப்பட்டது.
அதே நேரத்தில், இரவுணவு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளில் அந்தந்த குழுவினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இயற்கை கடற்காட்சிகள் ரசிப்பு:
பின்னர், கடற்புற இயற்கைக் காட்சிகளை Chaletஇல் இருந்தவாறே உறுப்பினர்கள் ரசிக்கத் துவங்கினர். மறுபுறத்தில், இதர உறுப்பினர்கள் டென்னிஸ் பந்தைக் கொண்டு க்ரிக்கெட் விளையாடினர். மற்றொரு புறத்தில், மழலைக் குழுவினர் இவற்றைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
மறையோதல் வகுப்பு:
பின்னர், மன்றத்தால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி, ஹாஃபிழ்களுக்கான திருக்குர்ஆன் வகுப்பு சிறிது நேரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தமது மனனத்தை மீளாய்வு செய்துகொண்டனர்.
சமையற்குழுவிற்கு நன்றி:
பின்னர், திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் உணவேற்பாடுகளைச் செய்து முடித்த சமையற்குழுவினருக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குழுப்படம்:
நிகழ்வின் தொடர்ச்சியாக, குடும்ப சங்கமம் மற்றும் குழுப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்களும் - பெண்களும் தனித்தனிப் பகுதிகளில் சந்தித்து, தமக்குள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டதுடன், ஆண்கள் குழுப்படமும் எடுத்துக்கொண்டனர்.
மஃரிப் தொழுகை:
மஃரிப் தொழுகைக்கான நேரத்தையடைந்ததையடுத்து, அதற்கான அதான் - அழைப்பொலி ஒலிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, 19.00 மணியளவில், சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் கூட்டுத் தொழுகையை வழிநடத்தினார்.
பொதுக்குழுக் கூட்டம்:
தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுக்குழுக் கூட்டம் - 19.45 மணிக்கு முறைப்படி துவங்கியது. ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஹம்மத் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். பெண்கள் திரை மறைவிலிருந்து கூட்ட நிகழ்வுகளை அவதானித்தனர்.
புதிய தந்தையின் இனிப்புச் செய்தி:
பின்னர், நீண்ட காலத்திற்குப் பிறகு தனக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றுள்ளதாக - ஆண் மகவு பிறந்த செய்தியை - மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன் அனைத்துறுப்பினர்களுக்கும் அகமகிழ்வுடன் தெரிவித்து, தன் மகிழ்ச்சியை செயலுறுவில் காட்டுமுகமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது குழந்தையின் நல்வாழ்வுக்காக துஆ செய்தனர்.
கூட்ட நிகழ்வுகள்:
இக்கூட்டத்திற்கு தலைமையேற்குமாறு மன்றத் தலைவர் எம்,ஆர்.ரஷீத் ஜமான் பெயரை மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் முன்மொழிய, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் அதனை வழிமொழிந்தார்.
அறிமுகவுரை:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அறிமுகவுரையாற்றினார்.
குடும்ப சங்கம நிகழ்வை சனிக்கிழமையே துவக்குதல்...
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் அனைவரும் ஒன்றுகூடியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், வருங்காலங்களில், சனிக்கிழமை மாலையிலேயே கூட்ட நிகழ்வுகளைத் துவக்கிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பங்கேற்பின் அவசியம்...
இதுபோன்ற கூட்டங்கள் - ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்பதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசிய அவர், வாரம் முழுவதும் தமது பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும் - போக்கவும் இதுபோன்ற ஒன்றுகூடல்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டியது அவசியமென அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
புதியோருக்கு வேலைவாய்ப்பு...
சிங்கப்பூர் அரசால் அண்மையில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான சட்ட விதிகளுக்கிடையிலும், தகுந்த வேலைவாய்ப்பு தேடி வந்த காயலர்கள் நால்வருக்கு தகுதியான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து, இதுபோன்ற அனைத்து நற்காரியங்களும் இறையருளால் மன்ற உறுப்பினர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாயிற்று என்றும், அனைவரின் நற்கருமங்களையும் அல்லாஹ் ஏற்று அருள்புரிவானாக என்றும் கூறி துஆ செய்து அவர் தனதுரையை நிறைவு செய்தார்.
மூன்று அம்சங்களை வலியுறுத்தி வரவேற்புரை:
பின்னர், தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார். உறுப்பினர்கள் மன்றத்தின் அனைத்து கூட்டங்களிலும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்றல், ஏப்ரல் 2013இல் தேர்ந்தெடுக்கப்படவுள்ள - மன்றத்தின் புதிய செயற்குழு பொறுப்புகளுக்குத் தகுதியானோரை இப்போதே இனங்காணல், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் - மன்றத்தின் அனைத்துறுப்பினர்களும் ஆயுட்கால உறுப்பினராதல் ஆகிய அம்சங்களை அவர் தனதுரையில் வலியுறுத்திப் பேசினார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தங்களைத் தாங்களே அனைவருக்கும் அறிமுகம் செய்து பேசிய புதிய உறுப்பினர்கள், சிங்கப்பூரில் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தாங்கள் வேலைவாய்ப்பைப் பெற்ற அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்துகொண்டதுடன், இது விஷயத்தில் தங்களுக்கு முழு உறுதுணையாயிருந்த சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினர்.
செயலர் அறிக்கை:
அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள நகர்நலப் பணிகளின் சுருக்க அறிக்கையை, மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத், பவர் பாய்ண்ட் உதவியுடன் அசைபட விரிதிரை துணையுடன் விளக்கிப் பேசினார்.
துணைக்குழுவினருக்கு நன்றி...
பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான பொறுப்பாளர்கள் பரிசீலித்து வழங்கிய அறிக்கையை கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட அவர், இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றிய பரிசீலனைக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர், இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை, மன்ற செயற்குழுவுடன் துணைப்பணியாற்றிய உறுப்பினர்களனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பயனாளிகள் எண்ணிக்கை...
பல்வேறு தேவைகளுக்காக இதுவரை மன்றத்தால் நிதியுதவி செய்யப்பட்ட மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 51 என்றும், அவர்களுள் 26 பேர் மருத்துவத்திற்காகவும், 16 பேர் கல்விக்காகவும், 7 பேர் மனிதாபிமான உதவித்திட்டத்தின் கீழும், 2 பேர் வணிகத்திற்காவும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த அவர், இதுபோன்று, இனி வருங்காலங்களிலும் மன்றத்தின் அனைத்துறுப்பினர்களும் நகர்நலப் பணிகளில் மன்றத்திற்கு வலிமையான ஒத்துழைப்பையும் - பங்களிப்பையும் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை தாக்கல் செய்தார்.
திட்டமிட்டதை விட கூடுதலாக உதவிகள்...
மன்றத்தால் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட செயல்திட்ட எதிர்பார்ப்பு நிதிநிலையறிக்கையையும் தாண்டி கூடுதலாக நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்த அவர், அதற்காக வல்ல அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
மன்றத்தின் வழமையான நிதியாதார செயல்திட்டங்களுடன், “ஒருநாள் ஊதிய நன்கொடை”, “ஜகாத் நிதியம்” உள்ளிட்ட - மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிதியாதாரத் திட்டங்கள்தான் இந்த முன்னேற்றத்திற்குக் காரணமென்றும் தெரிவித்த அவர், இனி வருங்காலங்களில் இன்னும் அதிகமான ஒத்துழைப்புகளை உறுப்பினர்கள் நல்கி, நகர்நலப் பணிகளை இன்னும் வீரியத்துடன் செய்திட துணைபுரியுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
துணைக்குழுவினர் உரை:
அடுத்து, மன்றத்தின் செயற்குழுப் பணிகளை இணைந்து கவனித்து விடைபெறும் துணைக்குழுவினர், தமது பணியனுபவங்கள் மற்றும் இப்பொறுப்புகள் குறித்த தமது பார்வையை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டனர்.
பல குழுக்களைத் தவிர்க்கலாம்...
இப்பொறுப்பிற்கென தனிக்குழு நியமிக்காமல், மன்றத்தின் விண்ணப்ப பரிசீலனைக் குழு மற்றும் விண்ணப்பங்களை முடிவு செய்யும் குழுவிடமே இப்பொறுப்புகளையும் கூடுதலாக வழங்கலாம் என துணைக்குழுவினருள் துவக்கமாக உரையாற்றிய முஹம்மத் உமர் ரப்பானீ தெரிவித்தார்.
கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றல்...
அடுத்து பேசிய ஹாஃபிழ் எம்.ஆர்.ஸூஃபீ, மன்றத்தின் அனைத்து நகர்நலப் பணிகளையும் பாராட்டியதுடன், கூட்டங்களில் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்பதன் அவசியம் குறித்தும் பேசினார்.
தாயக நண்பர்களுக்கு முன்மாதிரி...
அடுத்து பேசிய எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான், மன்றத்தின் இதுபோன்ற நலத்திட்ட உதவிச் சேவைகள், தாயகமாம் காயல்பட்டினத்தில் பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன் நண்பர் வட்டத்தால் முன்மாதிரியாகக் கருதப்பட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.
கூட்டங்களில் பங்கேற்கவியலாமைக்கு வருத்தம்...
அடுத்து பேசிய ஹாஃபிழ் எம்.டி.செய்யித் அஹ்மத், தனது இடையறா பணிச்சுமை காரணமாக மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்களில் தன்னால் பங்கேற்கவியலாமற்போனதற்காக வருத்தம் தெரிவித்ததுடன், புதிய பருவத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் தவறாமல் பங்கேற்பதாக உறுதியளித்தார்.
உலக கா.ந.மன்றங்களுக்கு முன்னோடி...
அடுத்து பேசிய எஸ்.ஐ.எஸ்.ஜக்கரிய்யா, புதுப்புது திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்துவதில் உலக காயல் நல மன்றங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகத் தெரிவித்ததுடன், இன்னும் பலப்பல புதிய திட்டங்களை இம்மன்றம் அறிமுகப்படுத்தி செயல்படுத்திட வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார்.
உணவுப் பதார்த்தங்களின் பட்டியலை முற்கூட்டி வழங்கலாம்...
இறுதியாக பேசிய மன்றத்தின் “நட்சத்திர பேச்சாளர்” வி.எம்.எம்.அப்துல்லாஹ், மன்றத்தின் கூட்ட ஏற்பாடுகள் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், இதுபோன்ற குடும்ப சங்கம நிகழ்வுகளில் ஏற்பாடு செய்யப்படும் உணவுப் பதார்த்தங்களின் விபரப்பட்டியலை உறுப்பினர்களுக்கு முற்கூட்டியே தெரியப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
மழலையர் மறையோதல் நிகழ்ச்சி:
அதனைத் தொடர்ந்து, மழலையரின் மறையோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமறை குர்ஆனிலிருந்து தமக்குத் தெரிந்த சிற்சிறு அத்தியாயங்களை மழலையர் தமதழகிய குரலில் ஓதி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இதில் பங்கேற்ற அனைத்து மழலையருக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட, உற்சாகத்துடன் அதனை மழலையர் பெற்றுக்கொண்டனர்.
மார்க்க அறிஞர் உரை:
பின்னர், தேவையுடைய மக்களுக்கு உதவிகள் வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் மகத்துவம் குறித்து உரையாற்றிய மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ, மன்ற செயற்குழுவின் நல்ல முயற்சிகளைப் பெரிதும் புகழ்ந்துரைத்தார்.
புதிய துணைக்குழு தேர்வு:
பின்னர், அக்டோபர் 2012 முதல் மார்ச் 2013 வரையுள்ள ஆறு மாத பருவத்திற்கான புதிய துணைக்குழுவினராக,
மொகுதூம் அப்துல் காதிர்
எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான்
முஹம்மத் உமர் ரப்பானீ
அபூபக்கர் ஸித்தீக்
ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஹம்மத் இஸ்மாஈல்
ஹபீப் மரைக்கார்
ஆகிய உறுப்பினர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நன்றியுரை:
பின்னர், உறுப்பினர் பி.எஸ்.எம்.அப்துல் காதிர் நன்றியுரையாற்றினார். நிகழ்வுகளில் பங்கேற்றோர், விருந்தினர்கள், ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைருக்கும் அவர் தனதுரையில் நன்றி தெரிவித்தார். ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இஷா தொழுகை:
பின்னர் இஷா தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் தொழுகையை வழிநடத்தினார்.
இரவுணவு விருந்துபசரிப்பு:
தொழுகை நிறைவுற்றவுடன் அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு இரவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
வசிப்பிடம் புறப்பாடு:
அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பின்னர், என்றும் மறக்கவியலா இனிய நினைவுகளுடன் 22.30 மணியளவில், பேருந்தில் அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
அனைவருக்கும் நன்றி:
இக்கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகளுக்கான அனைத்தேற்பாடுகளையும் செய்த ஏற்பாட்டுக் குழுவினர், நிகழ்வுகள் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நடந்தேற ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது, ஜஸாக்குமுல்லாஹு கைரா!
இனி வருங்காலங்களில் இன்னும் மெருகேற்றப்பட்ட செயல் திட்டங்களுடன் நகர்நலப் பணிகளாற்ற இன்றே உறுதி பூணுவோம். கருணையுள்ள அல்லாஹ் அதற்கருள் புரிவானாக, ஆமீன்.
கூட்ட நிகழ்வுகளின் அனைத்து படக்காட்சிகளையும் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக! (வரையறைக்குட்பட்டது.)
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |